கோவையில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட புத்தகங்களில் அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களிடம் இருந்து வாங்கப்பட்ட புத்தகங்கள் போலியான ஆசிரியர்கள் பெயரில் AI தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து அந்த புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையில், இந்த புத்தகங்களை பரிந்துரைத்தது யார்? ஆர்டர் கொடுத்த அதிகாரிகள் யார்? என கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுத்தாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாது அண்ணா நூற்றாண்டு நூலகம், திருச்சி நூலகம், கன்னிமாரா நூலகம் உள்ளிட்டவற்றிலும் அகல்விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் காணப்பட்டதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. அதைத் தொடர்ந்து தற்போது தென்காசியில் உள்ள மாவட்ட நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் 2 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Reach our readers. Contact us to advertise in this space.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் 2,200 புத்தகங்கள் தனி அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அகல்விளக்கு பதிப்பகத்தின் மீது குற்ற நடவடிக்கையை மேற்கொள்வதுடன், அவர்கள் கடந்த ஆண்டுகளில் தங்கள் போலியான புத்தகங்களை எந்தெந்த நூலகங்களுக்கு வழங்கியுள்ளனர் என்பதை கண்டறிந்து முழுமையாக இந்த புத்தகங்களை அழிக்க வேண்டும் என தமிழ் புத்தக பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கூறி வருகின்றனர்.






