← முகப்புகோயம்புத்தூர் →

புத்தகக் கொள்முதலில் முறைகேடு: கோவை பெரியார் அறிவுலகத்தில் சோதனை!

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

புத்தகக் கொள்முதலில் முறைகேடு: கோவை பெரியார் அறிவுலகத்தில் சோதனை!

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், மத்தியப் பேருந்து நிலையம் எதிரே சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களைக் கொண்ட இக்கட்டடம் கடந்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இங்கு நூலகங்கள், அறிவியல் சார்ந்த கட்டமைப்புகள், கூட்டரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலக நூலகத்துக்காக ‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ ஆகிய பதிப்பகங்களின் பெயர்களில் போலியான நூல்கள் தயாரிக்கப்பட்டு, அவை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இவ்விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

குறிப்பாக, இவ்விவகாரத்தில் ஆளும் தவெக அரசும் முந்தைய திமுக அரசும் மாறி மாறிக் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பெரியார் அறிவுலகத்தின் நான்காவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவு மற்றும் ஐந்து, ஆறாவது தளங்களில் செயல்படும் ஆங்கில நூல்கள் பிரிவுகளில் வைக்கப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட பதிப்பகங்களின் சுமார் 1,800 நூல்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 10) பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேரடியாகச் சோதனையில் இறங்கியுள்ளனர்.கோவை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் இம்மானுவேல் ஞானசேகர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட போலீஸ் குழுவினர் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அறிவுலகக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், அதற்கான ஒப்பந்தங்கள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் செலவின விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக இச்சோதனை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சோதனையின் முடிவில்தான் அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.