← முகப்பு

74 சதவீதம் அதிகரித்த போதைப்பொருள் வழக்கு! அரசு மௌனம்? – எதிர்கட்சிகள் கேள்வி!

தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு போதைப்பொருள் வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பாக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

74 சதவீதம் அதிகரித்த போதைப்பொருள் வழக்கு! அரசு மௌனம்? – எதிர்கட்சிகள் கேள்வி!

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததும் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் போதைப்பொருள் ஒழிப்புக்கு சிறப்புப் படை அமைத்ததும் ஒன்றாகும். அந்த சமயம் பல இடங்களில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் நாளுக்கு நாள் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை மாதவரத்தில் 140 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியதுடன், அது தொடர்பாக இருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று கண்ணகி நகரில் போதை மாத்திரைகள் விற்றதாக போலீஸாரின் சோதனையில் சிக்கிய சில பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போதைப்பொருள் ஒழிப்பில் எடுத்த நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், போதைப்பொருள் வழக்குகள் 74 சதவீதம் உயர்ந்துள்ளதை டிஜிபியே கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 137 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்த தவெக நிர்வாகி பூபாலனை தமிழகக் காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? அரியலூரில் ரோந்து பணியில் இருந்த ஊர்க்காவல்படை வீரர் மற்றும் தேனி சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் போதை ஆசாமிகளால் கொல்லப்பட்ட நிலையில், தமிழகத்தில் போதைப்பழக்கம் குறைந்துள்ளதாக எப்படி சொல்ல முடியும் என பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து பேசியுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், தமிழ்நாட்டில் பல இடங்களிலும் போதைப்பொருள் நடவடிக்கையை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கண்டறிந்து போதைப்பொருட்களை கைப்பற்றுவதும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதும் செய்திகளாக வந்துக் கொண்டிருப்பதாகவும், இதில் மாநில அரசின் காவல்துறை மற்றும் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் வருந்தத்தக்க அளவிலேயே உள்ளதாகவும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

மேலும் அவர் ” தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடங்கி நாகப்பட்டினம் வரை போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பதுக்கலையும் கண்காணித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர்தான் அவற்றைப் பறிமுதல் செய்கிறார்கள் என்றால், 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, 54 கோடி ரூபாய் செலவில் தலைமை அலுவலகம், 65 காவல் ஆய்வாளர்கள், 130 காவல் உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் எனப் பெரும் படையையே உருவாக்கியிருப்பதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எதற்காக அமைக்கப்பட்டது? மக்கள் வரிப்பணத்தில் இத்தனை கோடி ரூபாய் செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பிரிவின் செயல்பாடுதான் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக அரசு எந்தவித பாகுபாடுமில்லாமல் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இது இளைஞர்களின் எதிர்காலம் குறித்த முக்கியமான விஷயம் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !