தமிழில் பொல்லாதவன் தொடங்கி ஆடுகளம், வடச்சென்னை, விடுதலை என பல வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்கி வருபவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என பலர் நடித்து வெளியான படம் ’வடச்சென்னை’. இந்த படம் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அதற்கு பின்னர் ஒரு கல்ட் கிளாசிக்காக மாறி இன்றளவும் சினிமா ரசிகர்களிடையே பேசப்படும் ஒரு படமாக இருந்து வருகிறது. இதன் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுக்க வேண்டும் என பலர் கூறி வந்த நிலையில், வடச்சென்னையின் Prelude ஆக அரசன் படத்தை அறிவித்தார் வெற்றிமாறன். இந்த படத்தில் எஸ்.டி.ஆர் ஹீரோவாக நடிப்பதாக அறிவித்து படப்பிடிப்பும் வேகமாக நடந்து வந்தது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக முதல் ப்ரோமோ வெளியானது. அதில் எஸ்.டி.ஆரின் நடிப்பும், அனிருத்தின் இசையும் சேர்ந்து ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியது. அப்போதே படம் ஹிட் என்று பலரும் பேசிக் கொண்டார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் தீபாவளியன்று அரசன் படக்குழு சார்பில் டீசர் வீடியோ ஒன்று வெளியானது. அதில் எஸ்.டி.ஆர் நடந்து வர ’ஃபயரு..பயரு..ஃபயரு.. தாஸ் அண்ணே வந்தாலே ஃபயரு’ என்ற கானா பாடல் ஒலிக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது அனிருத் அமைத்த இசை இல்லை என்றும், அனிருத் திருமணத்தில் பிஸியாக இருந்தபோது இவர்கள் யாரையோ வைத்து ஒரு டீசர் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் பேசி வந்தனர். சமூக வலைதளங்களில் இந்த பாடல் பெரும் கிண்டலுக்கு உள்ளானது.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில்தான் அரசன் படத்திலிருந்து அனிருத் விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் வெற்றிமாறனுடன் லிடியன் நாதஸ்வரம் இருக்கும் புகைப்படங்களும் வைரலானது. அனிருத்-வெற்றிமாறன் இடையே வைப் செட்டாகவில்லை என்றும், அதனால் வெற்றிமாறன், இசை ஆர்வமுள்ள சிறுவன் லிடியன் நாதஸ்வரத்தை வைத்து இசையமைக்க நினைப்பதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியபோது, ”யூகங்களுக்கும் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல முடியாது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அது தொடங்கும்போது அனைவரும் அறிந்துக் கொள்வார்கள்” என சிம்பிளாக பதில் அளித்துள்ளார்.
வடச்சென்னை படத்தின் மீது அபிமானம் கொண்ட ரசிகர்கள் அரசன் படத்தை தொடர்ந்து உற்று நோக்குவதால் அதில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் வைரலாகி வருகின்றன.






