வங்கக்கடலில் கடந்த 15ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து 18ம் தேதி தீவிர புயலாக மாறியது. இந்த தீவிர புயலுக்கு அக்வான் என பெயரிடப்பட்டது. முதலில் இந்த புயல் வட தமிழகம்- ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் புயலின் பாதை தொடர்ந்து வடமேற்கில் நகர்ந்து ஒடிசாவை நோக்கி திரும்பியது.
இந்த நிலையில் இன்று அக்வான் புயல் வடக்கு ஆந்திரா – ஒடிசா எல்லையில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் கரையைக் கடக்க 2 மணி நேரம் ஆகும் என்றும், புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Buy Now ! Pay Daily !
ஒடிசாவில் முன்னெச்சரிக்கை:
அக்வான் புயலின் தாக்கம் ஒடிசாவில் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒடிசாவின் கஞ்சம், பூரி, கஜபதி, கேந்திரபாரா, ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
புயலால் கஞ்சம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுமார் 42 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசா முழுவதும் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.






