பஞ்சாப் மாநிலம் ஹம்யுன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பல்ஜிந்தர் சிங். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஏழையான பல்ஜிந்தர் சிங் லாரி டிரைவராக பணியாற்றி தனது குடும்பத்தை பராமரித்து வந்துள்ளார். அதிர்ஷ்டம் மேல் பல்ஜிந்தர் சிங்கிற்கு ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது. அதனால் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
அவர் கடந்த 2010ம் ஆண்டு முதலாகவே பல்வேறு லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த நிலையில் குடும்பத்தில் இது தெரிந்தால் பிரச்சினை வரும் என மறைமுகமாகச் செய்து வந்துள்ளார். சாதாரண லாட்டரி தொடங்கி விழாக்கால பம்பர் லாட்டரிகள் வரை வாங்கி பார்த்த பல்ஜிந்தர் சிங்கிற்கு கடந்த 15 ஆண்டுகளில் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. ஆனால் இறுதியில் தற்போது அந்த அதிர்ஷ்டம் பல்ஜிந்தர் சிங் வீட்டுக் கதவை தட்டியுள்ளது.
Buy Now ! Pay Daily !
விடாது லாட்டரி சீட்டு வாங்கி வந்த பல்ஜிந்தர் சிங் சமீபத்தில் பஞ்சாப் அரசு லாட்டரியில் தீபாவளிக்காக ரூ.12 கோடிக்கு வெளியிட்ட லாட்டரி சீட்டை ரூ.500 விலையில் வாங்கியுள்ளார். அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருக்கவே அவரது லாட்டரி எண்ணுக்கு அந்த ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த விவரம் கேள்விப்படவே பல்ஜிந்தர் சிங்கின் மொத்த கிராமமும் பல்ஜிந்தர் வீட்டுக்கு வந்து அவரை வாழ்த்தி, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியுள்ளனர். மேலும் இதுபற்றி பேசிய பல்ஜிந்தர் சிங், தனக்கு அதிர்ஷ்டம் மீது நம்பிக்கை இருந்ததாகவும், 15 ஆண்டுகளாக தான் தொடர்ந்து முயன்றதன் பலனை தற்போது பெற்றுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.






