மதுரை செக்கானூரணியில் உள்ள காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகாரளிக்க டிரைவர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்ற நிலையில் இரவு முழுவதும் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து காவல் நிலைய கழிவறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணன் உடலை உடனடியாக உடற்கூராய்வுக்கு போலீஸார் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து குற்றம் சாட்டியுள்ள பாலகிருஷ்ணனின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த திடீர் தற்கொலை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ” Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
Buy Now ! Pay Daily !
புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?
பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல இந்த மரணம் குறித்து பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் ” மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை காவல் நிலைய கழிப்பறையில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல் நிலையங்களில் ஐயத்திற்கு இடமான வகையில் உயிரிழப்புகள் நிகழ்வது கவலையளிக்கிறது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலக்காய் வணிகரிடம் ஓட்டுனராக பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன், கடந்த சில நாள்களுக்கு முன் ஏலக்காய் ஏற்றி வந்த சரக்குந்து தீப்பிடித்து எரிந்தது குறித்து புகார் அளிக்க வந்ததாகவும், ஆனால், அவரையே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று பாலகிருஷ்ணனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விசாரணைக் கைதிகளாக இருந்தாலும், புகார் அளிக்க வந்தவர்களாக இருந்தாலும் காவல் நிலைய வளாகத்தில் அவர்களின் உயிருக்கு காவல்துறை தான் பொறுப்பு. அந்த வகையில் பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கும் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த காவல்துறை ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் இதுவரை 7 காவல் நிலைய உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இனியும் அத்தகைய உயிரிழப்புகள் நிகழாதவாறு தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.






