நீலகிரி மாவட்டம், குன்னூர் – கோத்தகிரி அரவேனு சாலையில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் சிக்கியதால், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ள நிலையில், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் வாகனங்களும் கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில், நேற்று குன்னூரில் இருந்து கோத்தகிரி அரவேனு சாலையில் உள்ள வண்டிச்சோலை வழியாகச் சென்ற கர்நாடக மாநில சுற்றுலா பேருந்து, கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் சிக்கியது.
இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தற்போது கோத்தகிரி வழியாக வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால், வண்டிச்சோலை சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இச்சாலையில் போக்குவரத்துக் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையின் நுழைவுப் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தடையை மீறி வரும் கனரக வாகனங்களைக் கண்டறிந்து மாற்றுப் பாதையில் திருப்பி விட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


