← முகப்புவேலூர் →

“தமிழை நீக்கிவிட்டு இந்தியை முன்னிலைப்படுத்தும் முயற்சி நடக்கிறது” – திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர் – தமிழ் காப்பு பரப்புரை நடைப்பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), எஸ்டிபிஐ (SDPI), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“தமிழை நீக்கிவிட்டு இந்தியை முன்னிலைப்படுத்தும் முயற்சி நடக்கிறது” –  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு!

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தமிழகத்தில் இந்தி திணிப்பு:

ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் மூன்றாவது இடத்திலும், இந்தி இரண்டாவது இடத்திலும் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய முக்கியத்துவத்தை குறைத்து இந்தியை முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வங்கிப் படிவங்கள் முதல் நெடுஞ்சாலை அறிவிப்புப் பலகைகள் வரை பல்வேறு இடங்களில் இந்தி திணிக்கப்படுகிறது. குறிப்பாக காரைக்குடி பகுதிகளில் தமிழ், ஆங்கிலம் இல்லாமல் இந்தி மட்டுமே இடம்பெற்றுள்ள நெடுஞ்சாலைப் பதாகைகளும் உள்ளன. இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தமிழ் மொழிப் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைத்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஆறு மாதங்களாகியும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை. அரசு இதனைச் சரிசெய்து தமிழைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திராவிடத் தலைவர்களின் குடும்பத் திருமணங்களில் சமஸ்கிருதம்:

திராவிடக் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறி பதவியில் இருப்பவர்கள், தங்களது குடும்பத் திருமணங்களை சமஸ்கிருத வைதீக முறையில் நடத்துவது கண்டிக்கத்தக்கது. தொண்டர்கள் செய்வதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பொறுப்பான இடத்தில் இருக்கும் தலைவர்கள் அவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வைதீக முறையில் திருமணம் நடத்த விரும்பினால், அதற்குரிய கொள்கையைக் கொண்ட கட்சியில் இருக்கலாம். திராவிடக் கொள்கையைப் பின்பற்ற முடியாவிட்டால், அந்தக் கொள்கையை விட்டுவிட்டு விரும்பிய வழியில் செல்ல வேண்டும். பெரியாரையும் திராவிடக் கொள்கையையும் நம்பும் சாமானியத் தொண்டர்களை இழிவுபடுத்தக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பெரியார் அறிவுலக நூலக முறைகேடு:

பெரியார் அறிவுலக நூலகத்தில் ஊழல் நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்துகின்றன. நூலகத் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பதிப்பாளர்கள் கைது செய்யப்படாதது ஏன்? பதிப்பாளரைப் பரிந்துரைத்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

குற்றச்சாட்டுக்கு உள்ளான அச்சகப் பதிப்பாளர் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார். ஒட்டுமொத்த நூலகத் திட்டத்தையும் தவறாகப் பேசுவதை ஏற்க முடியாது. முறைகேட்டில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்து மனு அளிக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல வேண்டியது காவல்துறை மற்றும் ஊடகங்களின் பொறுப்பு எனப் பதிலளித்தார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் – காவல்துறைக்கு கேள்வி:

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனத் தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனிச் சட்டம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும்? காவல் நிலைய மரணங்கள் தொடர்பாகவும் உரிய கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் இதற்குப் பதில் அளிக்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் மீது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அதேபோன்ற நடவடிக்கையை இப்போதும் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது, மற்றொருவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், தவெகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகத் தவறு செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தும், அவர்கள் மீது முதலமைச்சர் கண்டனமோ சட்டரீதியான நடவடிக்கையோ எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

நீதிமன்றங்களின் செயல்பாடு குறித்த கேள்வி:

தீபம் ஏற்றுவது தொடர்பாக நேரடியாகக் கள ஆய்வு செய்யும் நீதிபதிகள், இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையும் ஏன் கையில் எடுப்பதில்லை? தமிழக அரசு மற்றும் காவல்துறையிடம் ஏன் கேள்வி எழுப்புவதில்லை?

நீதிமன்றங்கள் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. சாமானிய மக்களுக்காகவும் நீதிமன்றங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகரின் செயல்பாடுகள் தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா என்றும் எதிர்பார்க்கிறோம் எனக் கூறினார்.

தமிழகச் சிறைகளின் பாதுகாப்பு குறித்த கவலை:

கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் முன்பு பீகார் போன்ற மாநிலங்களில் நடைபெறும் செய்திகளாக இருந்தன. தற்போது தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறைகள் பலவீனமாகிவிட்டனவா அல்லது கைதிகள் பலமாகிவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் கவலை அளிக்கின்றன என்றார்.

ஜெம் வீரமணி வழக்கில் விசாரணை தேவை:

ஜெம் வீரமணி வழக்கில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது தமிழ்நாட்டின் எப்ஸ்டீன் கோப்புகள் போன்ற விவகாரமாக உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விசாரித்து, உரிய கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் எனத் திருமுருகன் காந்தி வலியுறுத்தினார்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !