முன்னறிவிப்பின்றி கடைகளில் அதிகாரிகள் சோதனை!
வேலூர் மாவட்டம், வேலூர் தொரப்பாடி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகளின் விளம்பரப் பலகைகள், போர்டுகள் மற்றும் நிரந்தரக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
மேலும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதாகக் கூறி, ஒவ்வொரு கடையாகச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே எந்தவித அறிவிப்பும் வழங்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
ஆத்திரமடைந்த வியாபாரிகள் சாலை மறியல்!
மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த வியாபாரிகள், வேலூர் – அரியூர் சாலையில் தொரப்பாடி பகுதியில் திடீரென ஒன்று திரண்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் அந்த வழியாகச் சென்ற பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். காலையிலேயே ஏற்பட்ட இந்த திடீர் மறியலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது!
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகளின் கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வியாபாரிகள் மறியலைக் கைவிட்டனர். இதையடுத்து போக்குவரத்து படிப்படியாகச் சீரானது.
தொடரும் மாநகராட்சி – வியாபாரிகள் இடையேயான மோதல் போக்கு!
வேலூர் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைகளால் வியாபாரிகளுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நேற்று நேதாஜி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி நடவடிக்கைகளைக் கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று தொரப்பாடியில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் உரிய முன்னறிவிப்பின்றி கடைகளில் ஆய்வு செய்து பொருட்களைப் பறிமுதல் செய்வதாக வியாபாரிகள் குற்றம்சாட்டும் நிலையில், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகமும் வியாபாரிகள் சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


