தென்காசி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் ராஜ பிரகாஷ். இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், இவரது இரண்டாவது மனைவியான சத்யாவின் தொலைபேசி உரையாடலும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மாற்றுக் கட்சியினைச் சார்ந்த திமுகவினருக்கு அவர் பதவி வழங்குவதாகவும், கட்சிக்காக உழைத்த நபர்களை பின்னுக்கு தள்ளுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து முழுமையாக அறிந்து கொள்ள நாம் களம் இறங்கினோம்.
Buy Now ! Pay Daily !
ரூ.5 லட்சம் பேரம் மற்றும் மாற்றுக் கட்சியினருக்குப் பதவி
கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சித் தலைமை ஊத்துமலை ஒன்றிய செயலாளர் வேல்ராஜ் என்பவருக்கு தலைமை அடையாள அட்டை வழங்கி ஒன்றியச் செயலாளர் பதவியை அறிவித்து மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தன்னை அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்டச் செயலாளர், ஆலங்குளம் வடகிழக்கு ஒன்றியச் செயலாளர் பதவியைத் தக்கவைக்க ரூ. 5 லட்சம் பணத்தை மூன்று தவணைகளாகத் தர வேண்டும் எனக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பணம் தர மறுத்ததால், கட்சித் தலைமை மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமலேயே ஊத்துமலையில் கூட்டம் நடத்தி, திமுக பின்னணி கொண்ட அருண்குமார் என்பவருக்குப் புதியதாக ஒன்றியச் செயலாளர் பதவியை மாவட்டச் செயலாளர் வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாக மக்கள் இயக்கக் காலம் முதலே கடுமையாக உழைத்தவர்களைக் கட்சியை விட்டு நீக்கிவிட்டு, பணம் பெற்றுக்கொண்டு மாற்றுக் கட்சியினரை உள்ளே இறக்குவதாகவும், தேர்தல் நேரத்தில் கூடத் தனது ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 கிராமங்களுக்கு மாவட்டச் செயலாளர் முறையாக வாக்கு சேகரிக்க வரவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகச் சாதி ரீதியிலான அரசியலை முன்னெடுத்து நிர்வாகிகளிடையே மோதலை உருவாக்குவதாகவும், தாங்கள் நடத்தும் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை மாவட்டச் செயலாளர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"தற்கொலை செய்து கொள்வேன், வேறு வழியில்லை":
மாவட்டச் செயலாளரின் இத்தகைய செயல்பாடுகளால் உழைத்த தொண்டர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறியுள்ள அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இவரைப் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துத் தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாகவும், "தென்காசி மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ் தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்தால் கண்டிப்பாகத் தற்கொலை செய்து கொள்வேன்; வேறு வழியில்லை" எனவும் அந்தப் பிரமுகர் உருக்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
