← முகப்புராணிப்பேட்டை →

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை இறுக்கிக் கொலை!

வாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 54 வயது பெண்ணைக் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை இறுக்கிக் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம், தென்கடப்பந்தாங்கல் வி.ஐ.பி. சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் கீதா (54). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில், கீதா தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், சொந்த வேலை காரணமாக இன்று கீதா வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது 14 வயது பேரன் சக்தி, வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, கழுத்து இறுக்கப்பட்டு பலத்த காயங்களுடன் தனது பாட்டி கீதா உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள், வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், மோப்ப நாய் யாரையும் அடையாளம் காட்டவில்லை.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த கீதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கீதா அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கீதாவின் மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணைக் கொலை செய்துவிட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வாலாஜாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !