← முகப்புராணிப்பேட்டை →

ராணிப்பேட்டை அருகே வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்கள்.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

காவேரிப்பாக்கம் அருகே தனியார் கேஸ் குடோனில் வைக்கப்பட்டிருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரபை ஏற்படுத்துயுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை ஒட்டி தனியார் கேஸ் ஏஜென்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் சிறிய அளவில் பற்றிய தீ, அலுவலகத்தில் இருந்த பொருட்களுக்குப் பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அலுவலகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்தத் தீ விபத்தில் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த புதிய கேஸ் பெட்டிகள், சுமார் 3,000 ரெகுலேட்டர்கள் மற்றும் 2 கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் சிக்கி முழுமையாக எரிந்து சேதமடைந்தன. இதன் சேத மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, அலுவலகத்தின் குடோனில் வைக்கப்பட்டிருந்த 10 கேஸ் சிலிண்டர்களில், தீயின் வெப்பம் காரணமாக 2 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடினர். மேலும், தீ மற்ற சிலிண்டர்களுக்குப் பரவாமல் தடுக்கும் வகையில் தீவிரமாகச் செயல்பட்டனர்.

தீயணைப்பு வீரர்களின் துரிதமான நடவடிக்கையால் வெடிக்காமல் இருந்த மீதமுள்ள 8 சிலிண்டர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. அவர்கள் சரியான நேரத்தில் செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதமும், மேலும் ஒரு பெரிய விபத்தும் தவிர்க்கப்பட்டது.

இந்தத் தீ விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவுதான் தீ விபத்துக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கேஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து காவேரிப்பாக்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !