← முகப்புராணிப்பேட்டை →

ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் – ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மாவட்ட ஆட்சியர் முனைவர் ப்ரியா ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தின் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியம், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் விபத்தின்போது தலைக்கவசம் உயிரைக் காக்கும் பாதுகாப்புக் கவசமாக விளங்குவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும், அதிவேகப் பயணத்தைத் தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளையும், காயங்களையும் குறைப்பதில் ஒவ்வொரு வாகன ஓட்டியின் பொறுப்புணர்வும் மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைந்தது.

இந்த ஊர்வலத்தில் காவல்துறையினர், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் உரிமையாளர்கள், பயிற்றுநர்கள், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

"தலைக்கவசம் அணிவோம்... உயிரைக் காப்போம்! சாலை விதிகளை மதிப்போம்... விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வோம்!" என்ற விழிப்புணர்வு கருத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !