ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா (Retinitis Pigmentosa - RP) என்ற மரபணு கண் நோயால் பார்வையிழந்தவர்களுக்கு MOGENRY (MCO-010) என்ற ஊசி சிகிச்சை புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த NanoscopeTherapeutics நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் சிகிச்சை, மருத்துவப் பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இந்த சிகிச்சை எப்படி செயல்படுகிறது? RP நோயால் கண்ணில் ஒளியை உணரும் செல்கள் (Photoreceptors) படிப்படியாக அழிகின்றன. இதனால் பார்வை குறைந்து, சிலருக்கு முழுமையான பார்வையிழப்பும் ஏற்படுகிறது. இந்த MOGENRY சிகிச்சையில், விழித்திரையில் எஞ்சியுள்ள பைபோலார் செல்கள் (Bipolar Cells) ஒளியை உணரும் வகையில் மாற்றப்படுகின்றன. இதனால் அவை ஒளிச் சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்ப உதவுகின்றன. இதன் மூலம் ஓரளவு பார்வைத் திறனை மீட்டெடுக்க முடியும் என கூறுகின்றனர். இந்தியாவில் நடைபெற்ற சோதனை இந்தச் சிகிச்சையின் ஆரம்பகட்ட மனிதப் பரிசோதனை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள JPM Rotary Club Eye Hospital-ல் நடைபெற்றது. இதில் அதிக அளவு மருந்து பெற்ற 8 நோயாளிகளில் 7 பேருக்கு பார்வையில் முன்னேற்றம் காணப்பட்டது. மேலும், அமெரிக்காவில் நடைபெற்ற RESTORE என்ற கட்டம் 2b/3 மருத்துவப் பரிசோதனையிலும் பார்வைத் திறனில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எப்போது பயன்பாட்டிற்கு வரும்? 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தச் சிகிச்சைக்கு அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தச் சிகிச்சை பார்வையை முழுமையாக மீட்டுத் தரும் என்பதற்கு, தற்போது வரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
இழந்த பார்வையை மீட்டெடுக்கும் புதிய ஊசி சிகிச்சை?
பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் வழி உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது MOGENRY என்ற புதிய ஊசி சிகிச்சை. மருத்துவப் பரிசோதனைகளில் நல்ல முடிவுகளை அளித்துள்ள இந்தச் சிகிச்சைக்கு 2027ஆம் ஆண்டில் அமெரிக்க FDA அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


