அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக, சாத்தமங்கலம் கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள வயலைப் பார்வையிட்டார். அப்போது சாகுபடி முறைகள் மற்றும் உரமிடுதல் தொடர்பாக விவசாயிகளிடம் கேட்டறிந்த அவர், பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்தி மகசூலை அதிகரிக்கும் வகையில் உரிய முறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தினார்.
Buy Now ! Pay Daily !
தொடர்ந்து, திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலவுடமைப் பதிவேற்ற முகாமை ஆய்வு செய்தார். அங்கு விவசாயிகளின் நில ஆவணங்களை எவ்வித விடுபாடுமின்றி துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருமானூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை மற்றும் உரங்களின் இருப்பு நிலவரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார்.
இறுதியாக, திருமானூர் ஊராட்சியில் உள்ள நெல் விதைப்பண்ணை வயலைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், நெற்பயிர்களுக்கு முறையாக உரமிடுவதுடன் தேவையான நீர்ப்பாசனப் பணிகளையும் உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வேளாண்மைத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.


