இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் 'வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி' திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றார்.
Buy Now ! Pay Daily !
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட 75-வது ஆண்டு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், பாஜக மேற்கொண்டுள்ள திருத்தங்கள் கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்திற்கு விரோதமாக உள்ளன.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' ஆகியவற்றின் மூலம் மாநில உரிமைகளைப் பறித்து, மத அடிப்படையிலான ஆட்சியை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது.
மேலும், எஸ்.ஐ.ஆர் நடைமுறையைத் திணித்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 13.5 கோடி வாக்காளர்களை நீக்கி மோசடியான முறையில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், கள்ளக்குறிச்சி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் மீதான புகாரில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த அன்றே தமிழக அரசும் காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அரசின் காலதாமதத்தால்தான் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் மனு கொடுப்பது, நீதிமன்றத் தலையீடு, சிபிஐ விசாரணை கோருவது போன்ற நிலைமைகள் உருவாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் குழு அமைத்து இரண்டு மாத அவகாசம் வழங்குவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரித்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் மீதான புகாரில் அரசு தாமதிப்பது நியாயமற்றது மற்றும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.
அடுத்ததாக கோயில் வழிபாட்டு முறைகள் தொடர்பாக ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், கோயில்களின் பூஜை மற்றும் வழிபாடுகள் அந்தந்த கோயிலின் மரபு, ஆகம விதிகளுக்கு உட்பட்டே நடைபெற வேண்டும். அதனை மாற்ற அரசுக்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை என்று கூறினார்.
மேலும் ஐயப்பன் கோயில் வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு என்ன ஆனது? தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த ஓராண்டு மட்டும் அதனை ஏற்றுக்கொள்வதாகக் கூறுவது முன்னுக்குப் பின் முரணாகவும், குழப்பமானதாகவும் உள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.

