வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘அக்வான்’ புயலாக வலுப்பெற்றது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து தீவிரப் புயலாக மாறியுள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், நவம்பர் 20-ம் தேதி நண்பகல் ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூருக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.அப்போது மணிக்கு அதிகபட்சமாக 145 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Buy Now ! Pay Daily !
இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், தென் தமிழகத்தின் சில பகுதிகள், வட கடலோர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19-ம் தேதி மழை எச்சரிக்கை
இதே போல் நாளை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.






