மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்தை இணைக்கும் எல்லையில் உள்ள கழனிவாசல் சோதனை சாவடி கீற்று கொட்டகை முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அச்சத்துடன் இருந்தனர். வெயிலும் மழையும் உள்ளே வராமல் தடுக்க தற்காலிகமாக டிஜிட்டல் பேனர்கள் கட்டி சோதனைச் சாவடி கீற்றுக் கொட்டகையில் செயல்பட்டு வந்தது.
மழைக்காலங்களில் காவலர்கள் தங்கிப் பணியாற்ற முடியாத அளவிற்கு சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அங்கு பணிபுரியும் காவலர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
Buy Now ! Pay Daily !
இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்ட நிலையில், அதன் எதிரொலியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கனிமம் மற்றும் தாதுக்கள் திட்டம் 2025–2026-ன் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய காவல்துறை சோதனைச் சாவடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது கட்டிடம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தை காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி காவல்துறையினர் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தனர்.
மேலும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக தலைக்கவசங்களை வழங்கி, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், புவனேஸ்வரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


