நாள்தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். தினமும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் அங்கிருந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு இக்கட்டான சூழல் நிலவுகிறது. இதனால் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 4 மினி பேருந்து சேவைகளை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
கட்டணமில்லா பேருந்து வசதி மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ” திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பு எண் 67-ஐ நிறைவேற்றும் வகையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் 4 புதிய சிற்றுந்து சேவைகளை இன்று தொடங்கி வைத்தேன். ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு பக்தர்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் வகையில் இந்தச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. சட்டமன்றத்தில் அறிவித்ததைச் உண்மையாக செயல்படுத்திக் காட்டுவதே எங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் அணுகுமுறை!
Buy Now ! Pay Daily !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நடைபெறவுள்ள கந்த சஷ்டி பெருவிழா மற்றும் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் சீரான தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சூரசம்ஹார விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள்: கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள்: 325 நிரந்தர கழிப்பறைகள், 300 தற்காலிக கழிப்பறைகள் மற்றும் 69 நிரந்தர குளியலறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு: 384 நிரந்தர கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 149 தற்காலிக நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி: 23 குடிநீர் பந்தல்கள், 68 குடிநீர் குழாய் இணைப்புகள், 10 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காவல் மற்றும் தீயணைப்புப் பாதுகாப்பு: 140 தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் வீரர்கள், 5 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காவல்துறை சார்பில் முதல் நான்கு திருவிழா நாட்களுக்கு 700 காவலர்களும், ஐந்து மற்றும் ஆறாம் திருவிழா நாட்களில் 5,000 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
கடலோரப் பாதுகாப்பு: மீன்வளத்துறை மற்றும் கடலோரக் காவல்துறை சார்பில் 5 படகுகள் மூலம் கடல் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். 30 மீனவர்கள் தன்னார்வலராக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ வசதிகள்: கோயிலில் முதலுதவி மையம், 6 இடங்களில் அரசு மருத்துவ முகாம்கள், 2 தனியார் மருத்துவ முகாம்கள் மற்றும் 7 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ORS கரைசல் வழங்கும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் பாதுகாப்பு வசதிகள்: கடற்கரைப் பகுதிகளில் 13 ஒளிக்கோபுரங்கள், 8 கண்காணிப்புக் கோபுரங்கள், 11 தற்காலிகக் கொட்டகைகள் மற்றும் 5 நிரந்தரத் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அன்னதானம் மற்றும் உணவு வசதிகள்: திருக்கோயிலில் நாள் முழுவதும் 11,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், தன்னார்வலர்கள் மூலம் 15,000 பேருக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், பொங்கல் மற்றும் பிஸ்கட் வழங்கவும், விரதமிருக்கும் பக்தர்களுக்கு பால் மற்றும் பழங்கள் வழங்கவும், தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
24 மணி நேரக் கண்காணிப்பு: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை, CCTV கண்காணிப்பு மையங்கள் மற்றும் கட்டணமில்லா புகார் எண் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பக்தர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் சிறப்பான தரிசன அனுபவத்தை வழங்க அனைத்து துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, தமிழர்களின் ஆன்மிகப் பெருமையையும் முருகப்பெருமானின் புகழையும் உலகெங்கும் எடுத்துச் செல்வோம்!” எனத் தெரிவித்துள்ளார்.






