தமிழக – கர்நாடக எல்லையான மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், தமிழக அரசு அதை எதிர்த்து வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை தர வேண்டுமென்றால் இந்த புதிய அணையை கட்டித்தான் ஆக வேண்டும் என கர்நாடக அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் சமீபத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், தான் உறுதியாக மேகதாதுவில் அணைக்கட்டியே தீருவேன் என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடனே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Buy Now ! Pay Daily !
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சை கண்டித்து தவெகவுடன் கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கையும் விட்டிருந்தார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்டன அறிக்கை விட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த கண்டனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ”ஒருவேளை காங்கிரஸ் இதை கண்டிக்கவில்லை என்றால் திமுக கண்டிப்பார்கள், திமுக கண்டிக்கவில்லை என்றால் அதிமுக கண்டிப்பார்கள். யார் கண்டித்தாலும் எனக்கு கவலையில்லை. இது என் மாநிலம், என் உரிமை.
தமிழ்நாட்டுக்கு 177 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த உரிமையை காப்பது எங்கள் கடமை. அணையை கட்டி தண்ணீரை நாங்கள் தருவோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் இது எந்த விதத்தில் தமிழகத்திற்கும் பயனுள்ளது என்று விளக்க நான் தயார்” என பேசியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக மேகதாது விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில், கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் இதை தற்போது வேகப்படுத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.






