← முகப்புதூத்துக்குடி →

மின்வாரியத்தில் 8,000 புதிய பணியிடங்கள்: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தியைத் தொடங்கி வைத்த அமைச்சர் நிர்மல் குமார், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி ஒரு செங்கல்கூட வைக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மின்வாரியத்தில் 8,000 புதிய பணியிடங்கள்: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சீரமைக்கப்பட்ட முதல் அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தியை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனல் மின் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மின் உற்பத்தி நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீ விபத்தில் சேதமடைந்த இரண்டு அலகுகளையும் சீரமைக்கும் பணிகள் முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதாகவும், எதிர்பார்த்த வேகத்தில் பணிகள் நடைபெறாத நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு துரிதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப 8,000 பேரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் படிப்படியாகப் பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணியாளர் கோரிக்கைகளுக்கும் சட்டச் சிக்கல்கள் ஏற்படாத வகையில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் எச்சரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் மேகதாதுவில் ஒரு செங்கலைக்கூட வைக்க தமிழக முதல்வர் அனுமதிக்க மாட்டார். இதுதொடர்பாகப் பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் தேர்தல் காலங்களில் அரசியல் காரணங்களுக்காக மேகதாது அணை விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டால் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். இதற்கிடையே, சிறுமி காணாமல் போன விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் உரிய தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !