← முகப்புதிருவாரூர் →

திருவாரூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை – 15 ரவுடிகள் கைது!

திருவாரூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போலீசார் நடத்திய அதிரடி சிறப்பு தேடுதல் வேட்டையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8 அரிவாள்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகையின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 38 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை – 15 ரவுடிகள் கைது!

திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பாக பண்டிகையைக் கொண்டாடும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, கொலை, கொள்ளை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதன்படி, திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், பவித்திரமாணிக்கத்தைச் சேர்ந்த சுகுமார், திருக்கண்ணமங்கையைச் சேர்ந்த முரளி, மன்னார்குடி பாமணி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த குருமாறன், முத்துப்பேட்டை ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த மனோகர் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 அரிவாள்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 15 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகை தினத்தன்று மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் அரசு மதுபானக் கடைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையின்போது குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !