கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது தென்னிந்திய மாநிலங்களில் பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் மாலை அணிந்து யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது ஐப்பசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் சபரிமலை மகரவிளக்கு தரிசனத்திற்காக நடை திறக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு மண்டலம் (48 நாட்கள்) பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். மண்டல பூஜைக்காக சபரிமலை சன்னதி வரும் 16ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அது தொடங்கி 2027 மண்டல பூஜை வரையிலான நாள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மண்டல – மகர விளக்கு பூஜை நாட்கள்:
Reach our readers. Contact us to advertise in this space.
மண்டல பூஜைக்காக கோயில் நடை 16ம் தேதி காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடப்பு ஆண்டின் மண்டல பூஜை 27ம் தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை 2027ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியும், பந்தளம் ராஜ குடும்ப தரிசனம் ஜனவரி 20ம் தேதியும் நடைபெறும். அதன் பின்னர் கோயில் நடை மூடப்படும்.
அதன்பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் பிப்ரவரி 12-17 வரையிலும், பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14-17 வரையிலும் திறக்கப்படும். பங்குனி ஆராட்டு விழா மார்ச் 12 தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும். மேலும் சித்தரை மாத பூஜைக்காக ஏப்ரல் 10ம் தேதி நடை திறக்கப்படும். வைகாசி மாத பூஜைக்காக மே 14-19 வரை நடை திறக்கப்படும். ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 15-20 வரையிலும், ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16-21 வரையிலும், ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 17-21 வரையிலும், புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-22 வரையிலும், ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-22 வரையிலும் கோயில் நடை திறக்கப்படும். பின்னர் விசேஷ நாட்களுக்கு, சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளுக்கு நடை திறக்கப்படும். அதன்பின்னர் 2027ம் ஆண்டு மண்டல பூஜை சீசன் நவம்பர் 16 தொடங்கி டிசம்பர் 27ல் முடிவடையும்.
தற்போது மண்டல சீசன் தொடங்கவுள்ள நிலையில் யாத்திரை வரும் பக்தர்கள் தங்கும் அறைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவசம்போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக முன்பதிவுகள் நடைபெறுகின்றன.
