← முகப்புதிருவண்ணாமலை →

திருமணம் செய்து வைக்கக் கோரிய மகன்... சடலமாகத் தோண்டி எடுக்கப்பட்ட சோகம்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, திருமணம் செய்து வைக்கக் கோரி தந்தையிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்த மகன் கொலை செய்யப்பட்டு வீட்டின் அருகே புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து வைக்கக் கோரிய மகன்... சடலமாகத் தோண்டி எடுக்கப்பட்ட சோகம்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே அல்லியாலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (60). இவரது முதல் மனைவி சாவித்திரிக்கு குழந்தை இல்லாததால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, நடராஜன் இரண்டாவதாக கமலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

நடராஜன் – கமலா தம்பதிக்கு சேகர் (37), பாபு (35) என இரு மகன்கள் உள்ளனர். கமலா இறந்ததைத் தொடர்ந்து, நடராஜன் வேண்டா (45) என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.இதில், திருமணமாகாமல் இருந்த பாபு, தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பெரணம்பாக்கத்தில் இருந்த பூர்வீக வீட்டை நடராஜனும் அவரது சகோதரரும் ரூ.20 லட்சத்திற்கு விற்றுள்ளனர். இதில் நடராஜனுக்குக் கிடைத்த ரூ.10 லட்சத்தில் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது ரூ.5 லட்சம் தர வேண்டும் என பாபு கேட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறின்போது, பாபு கத்தியால் தந்தையைத் தாக்க முயன்றதாகவும், அப்போது நடராஜனும் வேண்டாவும் சேர்ந்து பாபுவைக் கொலை செய்து வீட்டின் அருகே புதைத்ததாகவும் கூறப்படுகிறது.

பாபுவைக் காணவில்லை என அவரது அத்தை செல்வி (56), கடந்த 12-ஆம் தேதி போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் நடராஜன், வேண்டா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, 13-ஆம் தேதி வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து பாபுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !