தருமபுரி அடுத்த ராஜப்பேட்டை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் உணவின் தரம், உணவு வகைகள் மற்றும் கூடுதலாகத் தேவையான உணவுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவர்களின் கருத்துகளையும் தேவைகளையும் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னியரசு, தமிழக சட்டப்பேரவையில் மாணவர்களுக்கான உணவுத் தொகை மற்றும் உணவு வகைகளை அதிகரித்து அரசு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், மாணவர்கள் கூடுதல் உணவு வகைகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.
Buy Now ! Pay Daily !
எம்எல்ஏ மீதான புகார் குறித்து கருத்து
தொடர்ந்து எம்எல்ஏ தொடர்பான புகார் மற்றும் எஃப்ஐஆர் பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்தப் பாகுபாடும் இல்லாமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்க்கவில்லை என்றும் கூறினார். மேலும், நீதியரசர் லட்சுமி நாராயணன் உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, நீதிமன்றத்தின் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தின் தொடக்கத்திலிருந்தே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்றும், தவறுகளுக்கு யாரும் துணை நிற்க மாட்டோம் என்றும் கூறினார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து பேசிய அமைச்சர்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு மற்றும் ஆகம விதிகளின்படியே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றார். நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சந்தேகம் எழுப்பிய அவர், இந்த விவகாரத்தில் மக்களின் மத உணர்வுகளையும் மரபுகளையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் மதப் பதற்றத்தையும் சமூகப் பதற்றத்தையும் உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழலைச் சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தற்போதைய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்பதாகவும், கடந்த ஆட்சியில் எடுக்கத் தவறிய முடிவை தற்போதைய அரசு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அளித்த விளக்கத்தையும் குறிப்பிட்ட அமைச்சர், கோவில் மரபுகளையும் பக்தர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். இவ்வாறு பள்ளி உணவின் தரம், எம்எல்ஏ மீதான புகார் மற்றும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் எனப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
