கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணன், தங்கை இருவரும் நடுக்காட்டில் தனியாக தவிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெற்றோர்களே குழந்தைகளை காட்டில் விட்டுச் சென்றதாக தகவல் பரவிய நிலையில், இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கெலமங்கலம் அருகே நாரப்பணட்டி பகுதியைச் சேர்ந்த குமார் - சாந்தி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 21-ம் தேதி ஈரோடு மாவட்டம் பவானிக்கு கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது ஒரு கைக்குழந்தையை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டு, 6 வயது மகன் சஞ்சய், 3 வயது மகள் சஞ்சனா ஆகிய இருவரையும் பாட்டி வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில், கடந்த 23-ம் தேதி சாதனக்கல் பகுதியில் இருந்த குழந்தைகளை அவ்வழியாகச் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, குழந்தைகள் காட்டில் தனியாக விடப்பட்டதாக தவறான தகவல் பரவியது.
இதற்கிடையே, அன்றைய தினமே கெலமங்கலம் போலீசார் இரு குழந்தைகளையும் மீட்டு, குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு மூலம் அவர்களது பாட்டி பார்வதியம்மாள் மற்றும் அத்தை சினேகாவிடம் ஒப்படைத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் உண்மையல்ல என விளக்கமளித்துள்ள கலெக்டர், இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
