கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே ஸ்கூட்டி மீது பிஎம்டபிள்யூ சொகுசு கார் மோதிய விபத்தில், அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணவாசி பகுதியைச் சேர்ந்த பிரதாப் (16), மணவாசி சமத்துவபுரத்தைச் சேர்ந்த மாதேஷ் (16) ஆகிய இருவரும் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களுடன் ஸ்ரீதர், கார்த்திகேயன் (16) ஆகிய இருவரும் சேர்ந்து ஒரே ஸ்கூட்டியில் பயணம் செய்துள்ளனர்.
Buy Now ! Pay Daily !
நவம்பர் 23-ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும், நான்கு பேரும் மேட்டு மகாதானபுரம் நோக்கிச் சென்றுள்ளனர். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்மநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கைப்புதூர் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார், மாணவர்கள் சென்ற ஸ்கூட்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஸ்கூட்டியில் பயணம் செய்த மாதேஷ், பிரதாப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற இரு மாணவர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாணவர்கள் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, விபத்தில் கார் தலைகுப்புறக் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த நான்கு பேரும் படுகாயமடைந்து, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லாலாப்பேட்டை போலீசார், உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய அரசு பள்ளி மாணவர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
