ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைகள், நூலகங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஹரி விக்னேஷ் (26) என்பவரைப் பிடித்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் தொட்டிபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகனான ஹரி விக்னேஷ், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் ஏற்கனவே காவல் நிலையத்திற்குச் சென்று, எங்கள் தலைவர் தான் பிரதமர் நான் தான் முதலமைச்சர் என அடிக்கடி கூறி வந்த நபர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Buy Now ! Pay Daily !
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லை, மொடக்குறிச்சி ஆலங்காட்டுவலசு மற்றும் ஈரோடு தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்மேடு ஆகிய நான்கு இடங்களில் இந்தச் சேதப்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அங்கிருந்த கலைஞர் சிலைகள், நூலகங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் நடைபெற்ற இரவு ஹரி விக்னேஷ் மதுபோதையில் இருந்ததாகவும், பொது இடங்களில் மட்டுமின்றி தனது சொந்த வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் உடைத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் நான்கு வெவ்வேறு காவல் நிலைய எல்லைகளில் நடைபெற்றுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்வது தொடர்பாகக் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது ஹரி விக்னேஷிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை முடிவில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது மருத்துவச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவாரா என்பது தெரியவரும் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
