இந்த ஆண்டு கந்தசஷ்டி நாளை (நவம்பர் 15) நடைபெறும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், நிவேத்தியங்கள் நடைபெற உள்ளன. இவற்றில் சிகர நிகழ்வாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் சூரசம்ஹார விழாவாகும். அதனைத் தொடர்ந்து மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
முருக பக்தர்கள் பலர் சஷ்டியில் பிரதமை தொடங்கி திருக்கல்யாணம் வரை 7 நாட்கள் விரதம் இருப்பது உண்டு. இன்னும் சிலர் சூரசம்ஹாரம் வரை 6 நாட்களுக்கு விரதம் மேற்கொள்வர். சிலரால் வாரக் கணக்கில் விரதம் மேற்கொள்ள இயலாது என்றாலும் ஒரே ஒரு நாள் விரதமிருந்து வார விரதத்தின் நன்மையை அடைய முடியும். ஒருநாள் விரதம் இருக்க விரும்பும் பக்தர்கள் சூரசம்ஹார நாளன்று தங்கள் விரதத்தை மேற்கொள்ளலாம்.
Buy Now ! Pay Daily !
ஒருநாள் விரதம் மேற்கொள்வது எப்படி?
சூரசம்ஹாரத்திற்கு முதல் நாள் பார்வதி தேவியிடம் முருகபெருமான் வேல் பெற்ற நாளாகும். இந்நாளின் மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு, முருகன் திருவுருவப்படம் முன்னால் விளக்கேற்றி வைக்க வேண்டும். முருகக் கடவுளின் துதிபாடும் வேல்மாறல், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் உள்ளிட்டவற்றில் இருந்து பதிகங்கள் பாடி முருகனை மனமுறுகி வழிபட வேண்டும். அல்லது ’சரவணபவ’ என்னும் முருக மந்திரத்தை 108 முறை துதித்தும் முருகபெருமானை வேண்டலாம்.
மறுநாளான சூரசம்ஹார நாளில் காலையில் எழுந்து குளித்து, திருநீர் பூசி முருகனை வேண்டி நாள் விரதத்தை தொடங்கலாம். விரத நாளிலே நாள் முழுவதும் எதையுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. முடியாதவர்கள் நீர் ஆகாரம், பழச்சாறு, தண்ணீர் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மனதினுள் கொண்டிருக்கும் தீவிர பக்தியே பிரதானம்.
சூரசம்ஹார நாளிலே மாலை நேரத்தில் அருகே உள்ள முருகன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும். கோயில்களில் நெய் விளக்கு ஏற்றி முருகனை வழிபடலாம். கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். சஷ்டி நாளிலே முடிந்தளவு சிலருக்கு அன்னதானம் செய்வதோ, பிற உதவிகள் செய்வதோ முந்தைய கர்மவினைகளை தீர்க்கும் என நம்பப்படுகிறது. பச்சரிசி, வெல்லம் கலந்து மற்றவர்களுக்கு வழங்கலாம்.
கோவிலுக்கு சென்று வந்து முருகனை வழிபட்டு சைவ உணவுகள், பால், பழம் போன்றவை எடுத்துக் கொண்டு விரதம் முடிக்கலாம்.


