பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருக்கார்த்திகை தீப திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இதில் ஏழாம் நாள் விழாவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மகா ரதம் என்று சொல்லக்கூடிய மர தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
Buy Now ! Pay Daily !

கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாளான இன்று மகாரத தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏழாம் நாளான இன்று திருமணம் ஆன தம்பதியினர் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி அண்ணாமலையாரிடம் நேர்த்திக் கடனை மேற்கொள்வார்கள். அதன்படி குழந்தை பிறந்தவுடன் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து அண்ணாமலையார் ஆலயத்தின் முன்பாக வழிபாடு நடத்தி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
அந்த வகையில் இன்று ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் விதமாக கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை விட்டு நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர்.
