திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ப்ரீகேஜி படித்து வரும் 3 வயது சிறுவனை ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் தாக்கியதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் இரு கைகளையும் கட்டிப்போட்டு தாக்குவதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (33). இவருக்கு 3 வயதில் ஷர்வின் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ப்ரீகேஜி வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சிறுவனிடம் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் தன்னை தாக்கியதாக சிறுவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை கோபிநாத், உடனடியாக பள்ளிக்குச் சென்று சம்பவம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் பார்வையிட்டுள்ளார். அப்போது, 3 வயது சிறுவனின் இரு கைகளையும் கயிற்றால் கட்டி வைத்து தாக்கப்படுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த சிறுவனின் தந்தை கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, அந்த சிசிடிவி காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
Buy Now ! Pay Daily !
இதையடுத்து, தனது மகனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் கோபிநாத் புகார் அளித்துள்ளார்.பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் ஆகிய இருவர் மீதும் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தனியார் பள்ளி வகுப்பறையில் 3 வயது பிஞ்சுக் குழந்தையின் கைகள் கட்டப்பட்டு தாக்கப்படுவதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
பள்ளிக்குச் செல்லும் பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பெற்றோரின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் நிலையில், இத்தகைய புகார் எழுந்திருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்ய வேண்டிய பள்ளியிலேயே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார், கல்வி நிறுவனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சிசிடிவி காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
