சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளை
காளவாசல் புறவழிச்சாலையில் அமைந்துள்ள இந்த தனிஷ்க் நகைக்கடை, சுமார் 70 சதவீத கட்டுமானப் பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. சக்தி என்பவர் இதன் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நவம்பர் 10-ம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
Reach our readers. Contact us to advertise in this space.
மறுநாள் (நவ. 11) காலை வழக்கம் போல் கடைக்கு வந்த ஊழியர்கள், டிஸ்ப்ளே கவுன்டர்களின் கண்ணாடிப் பெட்டிகள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 48 கிலோ நகைகளில் 30 சதவீதமான 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு 25 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளே நுழைந்தது எப்படி?
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கொள்ளையர்கள் பின்பக்கக் கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் வழியாக மேல் தளத்திற்கு ஏறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின், இன்னும் பயன்பாட்டுக்கு வராத லிஃப்ட் அமைப்பதற்கான பாதை வழியாகக் கீழே இறங்கி ஷோரூமிற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் முகமூடி மற்றும் கையுறைகளுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நகைகள் வைக்கப்பட்டிருந்த உள்பக்கச் சுவர் மற்றும் கதவுகளை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்.எஸ். காலனி காவல் நிலைய போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். மதுரை மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன், வனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கடை மற்றும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதிகாலை நேரத்தில் முகமூடி, கையுறை மற்றும் கருப்பு நிறப் பையுடன் டிராலி பேக்கை உருட்டிக்கொண்டு ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
ஆரம்பத்தில் பல பேர் சேர்ந்து கைவரிசை காட்டியிருக்கலாம் எனச் சந்தேகித்த நிலையில், இந்தத் துணிகர கொள்ளையில் ஒற்றை நபர் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளி அணிந்திருந்த டிராலி பேக்கின் வடிவம், அளவு மற்றும் அவர் வந்துசென்ற வழித்தடங்களை சிசிடிவி கேமராக்கள் மூலமாகத் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
ஏ.சி.க்கள் தலைமையில் தனிப்படைகள் தீவிரம்
இந்த வழக்கை மிக முக்கியமாகக் கருதி, 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய பிரத்யேகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடையில் வேலை பார்த்த ஊழியர்கள், கட்டுமானப் பணியாளர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத கட்டடத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி ஷோரூம் செயல்பட்டதே குற்றவாளிகளுக்குச் சாதகமாக மாறியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






