← முகப்பு

தொடங்கியது கந்தசஷ்டி விழா! திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரம்!

இன்று கந்தசஷ்டி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் திருச்செந்தூரில் பக்தர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடங்கியது கந்தசஷ்டி விழா! திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரம்!

முருகப்பெருமானின் சிறப்புமிக்க திருவிழாக்களில் முக்கியமானது சஷ்டி விரதம். இந்நாளிலே பக்தர்கள் முருகனை வேண்டி 48 நாட்கள் தொடங்கி 24 நாட்கள், 6 நாட்கள் விரதம், சூரசம்ஹாரம் அன்று முழுநாள் விரதம் என பல்வேறு நாட்கணக்கில் விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவது வழக்கம்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

கந்தசஷ்டி நாளிலே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் விசேஷம்தான் என்றாலும், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரபலமானதாகும். சூரனை வதம் செய்த முருகபெருமான் வந்தமர்ந்த ஸ்தலம் என்பதாலே சஷ்டியில் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் சிறப்பு வாய்ந்தது. சூரசம்ஹாரத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் செல்கின்றனர்.

இந்த ஆண்டிற்கான சஷ்டி திருவிழா இன்று (நவம்பர் 10) திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இன்று முதல் தினசரி மாலை சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நவம்பர் 15 அன்று சூரசம்ஹார நிகழ்வும், மறுநாள் முருகர் – தெய்வானை திருமண நிகழ்வும் நடைபெற உள்ளது.

தமிழக அரசு ஏற்பாடுகள்:

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசும், அறநிலையத்துறையும் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி பக்தர்கள் இளைப்பாறுவதற்காக சுமார் 1 லட்சம் சதுரஅடி பரப்பளவிற்கு 11 இடங்களில் நிழற்கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் சுற்றுப்பகுதிகளில் 300 தற்காலிகக் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொலைவில் இருந்தே கண்டுகளிக்க 26 இடங்களில் LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் பயணிக்க இலவச பேருந்து வசதி, மக்களுக்கு வழங்க குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் முதலியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் பாதுகாப்பிற்காக 5000க்கும் அதிகமான போலீஸார் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு மருத்துவ முகாம்களும், ஆம்புலன்ஸும் தயார் நிலையில் உள்ளது. மேலும் கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Your brand belongs here

Reach our readers. Contact us to advertise in this space.

தொடங்கியது கந்தசஷ்டி விழா! திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரம்! | INDIAVAANI