விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. மாலையில் உற்சவர் சந்திரசேகர சுவாமிக்கு 16 வகையான அரிய மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜைகள் நடத்தப்பட்டு, அம்பாள் மற்றும் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் பிரகாரம் முழுவதும் பக்தர்களால் ஏற்றப்பட்ட நூற்றுக்கணக்கான அகல் விளக்குகளால் ஒளிமயமாகக் காட்சியளித்தது.
தொடர்ந்து, ஆலயத்தின் நுழைவாயில் முன்புள்ள வளாகத்தில் பனை ஓலைகளால் பிரம்மாண்டமான கோபுரம் போன்று அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மனித மனங்களில் சூழ்ந்துள்ள அறியாமை எனும் இருளை நீக்கி, ஞானம் எனும் ஒளியைப் பரப்புவதே இந்த சொக்கப்பனை தீப வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும்.
Buy Now ! Pay Daily !
தீபம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் "அரோகரா" என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆன்மிக நிகழ்வில் கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வெளியூர் பக்தர்களும் திரளாகக் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
