← முகப்புராணிப்பேட்டை →

ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற 75 வயது மூதாட்டி!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு, மருமகள் மற்றும் பேரன் கொடுமைப்படுத்துவதாகக் கூறி 75 வயது மூதாட்டி ஒருவர் டீசலை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற 75 வயது மூதாட்டி!

ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவரது மனைவி வசந்தா (75). இவர்களுக்கு ஏழுமலை (45) என்ற மகன் உள்ளார். ஏழுமலைக்கும், உறவினர் மகளான சங்கீதாவுக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மோகன் (20) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது சொத்து பத்திரங்கள் மற்றும் தனது நகைகளை மருமகள் சங்கீதா மிரட்டி வாங்கிக்கொண்டதாக வசந்தா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மருமகள் மற்றும் பேரன் இருவரும் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசந்தா, தனக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, தனது சொத்து பத்திரங்கள் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கிக்கொண்டு தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் கூறப்படும் மருமகள் மற்றும் பேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த டீசலை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று மூதாட்டியைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலிலேயே 75 வயது மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !