← முகப்புநாகப்பட்டினம் →

விழாக்கோலம் பூண்ட நாகூர் நகரம்! நாளை சந்தனக்கூடு ஊர்வலம்!

நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழாவின் எட்டாம் நாள் நிகழ்வான மத்தாப்பு இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

கண்கவரும் வாணவேடிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மத நல்லிணக்கத்திற்கும், மத ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்று வரும் 470-வது ஆண்டு கந்தூரி விழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் களைகட்டியுள்ளது.

14 நாட்கள் நடைபெறும் இவ்விழா, முதல் நாள் புனிதக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் சிறப்புப் பிரார்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விழாவின் எட்டாம் நாள் நிகழ்வான மத்தாப்பு இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதையொட்டி தர்காவின் அலங்கார வாசல் முன்பு நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியில், வானில் சீறிப்பாய்ந்து வெடித்த வண்ண வண்ண பட்டாசுகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

குறிப்பாக மத்தாப்புகள், சங்கு சக்கரங்கள், ஈச்சமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகள் வானில் வர்ணஜாலம் படைத்து கண்களுக்கு விருந்தளித்தன. இரவு வானையே வண்ணமயமாக்கிய இந்தக் கண்கவர் நிகழ்ச்சியைக் காண அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், நாகூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

470-வது ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, 20-ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்குச் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறவுள்ளது.முக்கிய நிகழ்வுகளான சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளதால், நாகூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் தர்கா நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !