← முகப்புதஞ்சாவூர் →

கேக் தரம் எப்படி? தஞ்சை அருகே பள்ளிக்கே சென்று அதிரடி ஆய்வு நடத்திய அதிகாரி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 45 கிராம் எடையுள்ள கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேக் தரம் எப்படி? தஞ்சை அருகே பள்ளிக்கே சென்று அதிரடி ஆய்வு நடத்திய அதிகாரி

தஞ்சாவூர், நவ.13: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்றே கேக் வழங்கப்பட உள்ளது. இதற்காக முன்கூட்டியே பள்ளிகளுக்கு வாங்கி அனுப்பப்பட்டுள்ள கேக்குகள் தரமானதாக உள்ளதா? அவை மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாதுகாப்பானவையா? என்பது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணனுன்னி பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பள்ளிகளில் கேக் தரம் குறித்து ஆய்வு

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவப் பணிகள் இயக்குநருமான கிருஷ்ணனுன்னி, மாவட்ட கலெக்டர் ரேவதி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் குறிப்பாக, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 45 கிராம் எடையுள்ள கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு இன்றே கேக் வழங்கப்படுகிறது.

இதற்காக முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கேக்குகள் உரிய தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளனவா? அவற்றின் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு நிலை எப்படி உள்ளது? மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையில் கேக்குகள் நல்ல நிலையில் உள்ளனவா? என்பது குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

இதன் ஒரு பகுதியாக பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்ற கிருஷ்ணனுன்னி, மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கேக்குகளை பார்வையிட்டு அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மதிய உணவு, மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு

தொடர்ந்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு சத்தான உணவு முறையாக வழங்கப்படுகிறதா? உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்தும் ஆசிரியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதுதவிர பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் பார்வையிட்டு அவை முறையாக பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.

கால்நடை தீவனப் பயிர் சாகுபடி ஆய்வு

பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை முடித்த பின்னர் பாளையப்பட்டி ஊராட்சிக்கு சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணனுன்னி, அங்கு கால்நடைகளுக்கான தீவனப் பயிர்கள் வளர்க்கப்படும் இடங்களை நேரில் பார்வையிட்டார். கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தீவனப் பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் அதன் பயன்பாடு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக்குகளின் தரத்தை முன்கூட்டியே ஆய்வு செய்ததுடன், பள்ளிகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !