← முகப்புநீலகிரி →

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை எப்போது திறக்கும்?

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு, தடுப்புச் சுவர் கட்ட வேண்டிய அவசியம் மற்றும் சாலையை மீண்டும் திறப்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்துள்ள எச்சரிக்கைகள் குறித்து இந்தச் செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவு அபாயம் காரணமாக, சாலையை உடனடியாகத் திறக்க வேண்டாம் என்றும், தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னரே போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி பெய்த கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் முதல் கல்லார் வரையிலான பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, பர்லியார் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய மண் சரிவு காரணமாக, அந்த வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சேதமடைந்த சாலையைச் சீரமைப்பது தொடர்பாகப் பல்வேறு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்புத் தன்மையைப் பரிசீலித்து, விரைவில் போக்குவரத்து தொடங்கப்படும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து வருகை தந்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தலைமைப் பொறியாளர் ஸ்ரீதர், பர்லியார் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் குழுவினருடன் இணைந்து சாலையின் அகலம், மண்ணின் உறுதித்தன்மை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளின் நிலை குறித்து அளவீடுகள் செய்து ஆய்வு நடத்தினார். அப்போது, மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதியில் வலுவான தடுப்புச் சுவர் அமைப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போதைய சூழலில் அந்தப் பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தடுப்புச் சுவர் கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, தடுப்புச் சுவர் கட்டி முடிக்கப்படும் வரை வாகனப் போக்குவரத்தை அனுமதிக்காமல் இருப்பது, பணிகளை விரைந்து முடிப்பதற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையைத் தற்போது திறப்பது குறித்து அவசர முடிவு எடுக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். சாலையின் பாதுகாப்பு மற்றும் மழையின் நிலவரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களே சாலையைத் திறப்பது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், சாலையை அவசரமாகத் திறந்துவிட்டால் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு மண் மற்றும் பாறைகள் சாலையில் விழும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை நீலகிரி மாவட்டத்திற்கான முக்கியப் போக்குவரத்து வழித்தடமாக இருப்பதால், அதன் மூடல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மண் சரிவு அபாயம் நீடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக முடித்த பின்னரே சாலையைத் திறப்பது அவசியம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கி முடிக்கப்படும், அதன் பின்னர் எப்போது வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்பதே தற்போது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பாக உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !