மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு இடைக்கால அனுமதி வழங்கி கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு மத நல்லிணக்கத்திற்கு எதிரானது எனக் கூறி, ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இன்று திருச்சி தில்லை நகர் பகுதியில் திரண்டு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தங்களது கையில் வைத்திருந்த உத்தரவு நகல்களைக் கிழித்ததுடன், அவற்றைத் தீயிட்டு எரிக்கவும் முயன்றனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி மாநகரக் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
Buy Now ! Pay Daily !
மேலும், போராட்டக்காரர்களிடமிருந்த எஞ்சிய உத்தரவு நகல்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் தில்லை நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போராட்டத்திற்கு பின்னர் மாநில செயலாளர் ஜீவா அளித்த பேட்டியில்:-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பது தீர்ப்பல்ல; அது ஒரு அநீதி. தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான தீப்பந்தம் அது. ஆங்கிலேயர் ஆட்சிக் கால நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளிலேயே தர்கா அருகே உள்ள கற்றூண் தீபத்தூண் அல்ல எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் தவிர்த்து தமிழகத்தின் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் இந்தத் தீபம் ஏற்றும் நடவடிக்கைக்கு எதிராக உள்ளன. தமிழக காவல்துறையை நம்பாமல் மத்தியப் படைகளைக் குவித்து மக்களை அச்சுறுத்துகிறார்கள்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கை மதக் கலவரத்திற்கு வழிவகுத்தால், அது உங்கள் ஆட்சிக்கு அழியாத கறையாகிவிடும். உங்களுக்கு வாக்களித்த இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில் கொண்டு, இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் ரத்த ஆறாக ஓடுவதைத் தடுக்கவே இந்தத் தீர்ப்பு நகலை எரித்துப் போராட்டம் நடத்துகிறோம். இதற்காகச் சிறைக்குச் செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம். பெரியார் மற்றும் இடதுசாரிகளின் மண்ணான தமிழகத்தின் மத நல்லிணக்கத்தைக் காக்கப் பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

