ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிட்டாலும் சிலருக்கு எப்போதும் உடல் சோர்வாகவும், களைப்பாகவும் இருக்கும். காலையில் எழுந்தவுடன் சோர்வாக இருப்பது, வேலை செய்யும்போது விரைவில் களைப்படைவது, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இளம் வயதினர் உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி செல்வது, வேலை செய்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் பல இளைஞர்கள் போதுமான உணவு சாப்பிட்டாலும் உடல் சோர்வால் அவதிப்படுகின்றனர். இதற்கு உணவு குறைவாக சாப்பிடுவது மட்டுமே காரணம் கிடையாது. நமது உணவுப் பழக்கம், தூக்க முறை, மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற பல விஷயங்களும் உடல் சோர்வை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் கூறும் தீர்வுகள் மற்றும் விளக்கங்கள் பற்றி பார்ப்போம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவது மட்டும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுத்துவிடாது. உடலுக்கு தொடர்ந்து ஆற்றல் கிடைக்க உணவுடன் சேர்த்து நல்ல தூக்கம், மன அமைதி மற்றும் உடல் இயக்கமும் அவசியம்.
Buy Now ! Pay Daily !
உடல் சோர்வுக்கான நான்கு முக்கிய காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. சரியான சத்துக்கள் இல்லாத உணவு நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம் என்பதற்காக உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன என்று அர்த்தமில்லை. உதாரணமாக, சிலர் தினமும் அதிகமாக சாதம், இனிப்புகள், பிஸ்கட், பேக்கரி உணவுகள் மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கலாம். ஆனால் உடலுக்குத் தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து போன்ற முக்கியமான சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்காமல் போகிறது. மேலும், அதிகமாக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கிறது. இதனால் மீண்டும் பசி ஏற்படுவதுடன் சோர்வும் உண்டாகலாம். என்ன செய்ய வேண்டும்? - புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். - காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். - நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். - நல்ல கொழுப்புச் சத்து உள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். - ஒரே மாதிரியான உணவைச் சாப்பிடாமல் பலவகையான சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
2. போதுமான தூக்கம் இல்லாமை உடல் சோர்வுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தூக்கமின்மை. சிலர் இரவு நேரங்களில் நீண்ட நேரம் மொபைல் போன், தொலைக்காட்சி மற்றும் கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் தூங்கும் நேரம் தாமதமாகிறது. தினமும் வெவ்வேறு நேரங்களில் தூங்குவதும், காலையில் வெவ்வேறு நேரங்களில் எழுவதும் உடலின் இயற்கையான தூக்கச் சுழற்சியைப் பாதிக்கலாம். போதுமான தூக்கம் இல்லாதபோது உடலில் சோர்வு ஏற்படுவதுடன், கவனிக்கும் திறனும் குறையலாம். வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். என்ன செய்ய வேண்டும்? - தினமும் ஒரே நேரத்தில் தூங்கப் பழக வேண்டும். - ஒரே நேரத்தில் காலையில் எழ வேண்டும். - தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு மொபைல் போன் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். - இரவு நேரத்தில் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
3. மன அழுத்தம் அதிகமாக இருப்பது இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.படிப்பு தொடர்பான கவலைகள், வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள், பணப் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் அது உடலையும் பாதிக்கும். இதனால் தூக்கம் சரியாக வராமல் போகலாம். பசியின்மை அல்லது அதிக பசி ஏற்படலாம். உடல் சோர்வுடன் மனச்சோர்வும் ஏற்படுகிறது இதன் காரணமாக ஒரு வேலையைச் செய்யும்போதுகூட விரைவில் களைப்படையலாம். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். என்ன செய்ய வேண்டும்? - வேலைக்கு இடையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். - ஆழமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியே விடும் பயிற்சியைச் செய்ய வேண்டும். - தேவையில்லாமல் மொபைல் போன் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த செயல்களில் ஈடுபட வேண்டும். - போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை தற்போதைய வாழ்க்கை முறையில் பலர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அலுவலக வேலை, கணினி பயன்பாடு, மொபைல் போன் பயன்பாடு மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றால் உடல் இயக்கம் குறைகிறது. தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் உடலின் சகிப்புத்தன்மையும், உடல் வலிமையும் குறையலாம். இதனால் சிறிய வேலைகளைச் செய்தால்கூட அதிகமாகக் களைப்படைய வாய்ப்புள்ளது. என்ன செய்ய வேண்டும்? - தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் உடல் இயக்கம் உள்ள செயல்களில் ஈடுப்பட வேண்டும். நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். - அவ்வப்போது எழுந்து நடந்து உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கியமான மருத்துவ எச்சரிக்கை! மூன்று வேளை உணவு சாப்பிட்டாலும், போதுமான தூக்கம் எடுத்தாலும், தொடர்ந்து உடல் சோர்வு இருந்தால் அதை சாதாரணமான பிரச்சினை என்று நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது. சில நேரங்களில் உடல் சோர்வுக்கு வேறு மருத்துவக் காரணங்களும் இருக்கலாம். எனவே நீண்ட நாட்களாகச் சோர்வு தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உணவு மட்டும் போதாது. சரியான உணவு, போதுமான தூக்கம், மன அமைதி,தினசரி உடற்பயிற்சி என இந்த நான்கும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை. இந்த நான்கு பழக்கங்களையும் சரியாகப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியத்தையும், அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலையும் மேம்படுத்த உதவும்.
குறிப்பு: இந்தக் கட்டுரை பொதுவான சுகாதார விழிப்புணர்வுக்காக மட்டுமே. தொடர்ந்து உடல் சோர்வு இருந்தால் மருத்துவரை அணுகவும்.


