← முகப்பு

தனிஷ்க் கொள்ளையன் கைது! - போலீசாரிடம் சிக்கியது எப்படி?

மதுரையை உலுக்கிய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைக்கடை கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியும் யூடியூபருமான நிஷாந்த், 5 நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிஷ்க் கொள்ளையன் கைது! - போலீசாரிடம் சிக்கியது எப்படி?

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகர் பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதியதாக 'தனிஷ்க்' நகைக்கடையின் புதிய ஷோரூம் திறக்கப்பட்டது. கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை நேரத்தில், உடல் முழுவதும் கருப்புத் துணியைச் சுற்றிக்கொண்டும், முகமூடி மற்றும் கையுரே அணிந்தவாறூம் தனி ஒரு நபராகக் கடைக்குள் நுழைந்த நபர், அங்கிருந்த சுமார் ₹15 முதல் ₹21 கோடி மதிப்புள்ள பல கிலோ தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றார். கடையின் உள்ளே சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் பொறுமையாகத் தேடித் தேடி நகைகளைத் திருடிய அந்த நபர், பின்னர் நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டியில் தப்பியோடினார்.

இந்த துணிகரக் கொள்ளை இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியைப் பிடிக்க மதுரை மாநகரக் காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையன் செல்லும் வழிகள் மற்றும் அவன் பயன்படுத்திய வாகனங்கள் பதிவாகியிருந்தன. விசாரணையின் முடிவில், பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகனும், யூடியூபருமான நிஷாந்த் (25) தான் இந்தச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டு முகமூடி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. புதியதாகத் திறக்கப்பட்ட அந்த நகைக்கடைக்குக் கொள்ளை நடப்பதற்கு முன்பு பலமுறை வாடிக்கையாளர் போல் நிஷாந்த் சென்றுள்ளார். அங்குள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கேமராக்களின் அமைப்புகளைத் துல்லியமாக நோட்டமிட்டுள்ளார். நிஷாந்தின் கையில் இருந்த ஒரு தனித்துவமான 'டேட்டூ' மற்றும் கடை ஊழியர்களின் வாக்குமூலம் காவல்துறையினர் துப்பு துலக்கப் பெரிதும் உதவியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கூட்டாளிகள் மற்றும் நிஷாந்தின் தந்தை சிக்கியது எப்படி?

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை நிஷாந்த் தனது தந்தை சுரேஷிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார். மேலும், தன் தோழியும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸருமான மீனாட்சி என்பவருடன் அவருக்குத் தொடர்பிருப்பதும் கண்டறியப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் யூடியூபர் மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாடக்குளம் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் கொள்ளையின் போது நிஷாந்த் தான் அணிந்திருந்த துணிகளை எரித்துவிட்டு, மீதமுள்ள தங்க நகைகளில் ஒரு பகுதியைப் புதைத்து வைத்திருந்த இடங்களை மீனாட்சியின் வாக்குமூலத்தின் பேரில் போலீசார் கண்டறிந்து சுமார் 5 கிலோ நகைகளை மீட்டனர்.

நிஷாந்தை சிக்க வைத்த பஸ் டிரைவர்

போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்ததும் நிஷாந்த் தலைமறைவானார். தனிப்படையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், பெங்களூரில் இருந்து சேலம் வந்த ஆம்னி பேருந்தில் நிஷாந்த் ஏறியுள்ளார். அவரை பார்த்து சந்தேகமடைந்த ஆம்னி பஸ் டிரைவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தருமபுரி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது அதியமான் கோட்டை போலீஸார் வழிமறித்தனர். போலீஸார் நெருங்கியதை அறிந்த நிஷாந்த், பேருந்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோட முயன்றபோது நள்ளிரவு 2 மணியளவில் போலீசார் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து எஞ்சியுள்ள நகைகளை மீட்கும் பணியும், சட்டப்பூர்வ விசாரணைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !