இந்த சாதனையை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்டார்லிங்க் பற்றிய விரிவான தகவல்களை தற்போது பார்ப்போம்.
ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இயக்கப்படும் செயற்கைக்கோள் இணையச் சேவையாகும். பூமியின் மிகத் தொலைதூரப் பகுதிகளுக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
Buy Now ! Pay Daily !

ஸ்டார்லிங்க் எப்படிச் செயல்படுகிறது?
வழக்கமாக நாம் பயன்படுத்தும் இணையச் சேவைகள் பூமியிலிருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு சில பெரிய அளவிலான செயற்கைக்கோள்களை நம்பியுள்ளன. இதனால் தரவுகள் பரிமாற்றத்தில் அதிகத் தாமதம் ஏற்படும். ஆனால், ஸ்டார்லிங்க் பூமியின் தாழ்வட்டப் பாதையில், அதாவது சுமார் 550 கி.மீ. உயரத்தில் ஆயிரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்களைக் தன்னுள் வைத்துக்கொண்டு பூமியை வட்டமடிக்கிறது.. பூமிக்கு மிக அருகில் இவை இருப்பதால், இணைய வேகம் மிக அதிகமாகவும், எவ்வித இடர்பாடுகளுமின்றி பயனர்களுக்கு கிடைக்கும். பயனர்களின் வீடு அல்லது அலுவலகத்தில் ஒரு சிறிய டிஷ் ஆன்டெனா, வைஃபை ரவுட்டர் மற்றும் பவர் சப்ளை ஆகியவை பொருத்தப்பட்டு, வானம் தெளிவாகத் தெரியும் இடத்தில் இவை வைக்கப்பட்டால், அது தானாகவே விண்ணில் உள்ள செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ளும். செயற்கைக்கோள்கள் தங்களுக்குள் லேசர் ஒளி மூலம் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் கொண்டவை. இதனால், ஃபைபர் கேபிள் அல்லது செல்போன் டவர் வசதி இல்லாத மலைப்பிரதேசங்கள், காடுகள், கிராமங்கள் மற்றும் தீவுகளுக்கும் இணைய சேவை கிடைக்கும். புயல், வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் தரைவழித் தொடர்புகள் துண்டிக்கப்படும்போது, ஸ்டார்லிங்க் மூலம் உடனடியாகத் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியும். சாதாரண 4G/5G ஸ்மார்ட்போன்களுக்கு எந்தக் கூடுதல் கருவியும் இல்லாமல் நேரடியாகச் செயற்கைக்கோள் மூலம் சிக்னல் வழங்கும் தொழில்நுட்பத்தையும் ஸ்டார்லிங்க் விரிவுபடுத்தி வருகிறது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க்கின் நிலை என்ன?
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன: இந்தியத் தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு உரிமத்தையும், இந்திய விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பிடமிருந்து அனுமதியையும் ஸ்டார்லிங்க் பெற்றுள்ளது. இந்தியப் பயனர்களின் தரவுகள் இந்தியாவிற்குள்ளேயே பாதுகாக்கப்படும் வகையில் சுமார் 20 தரைவழி நுழைவாயில் நிலையங்களை அமைத்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களுடன் விநியோக ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புத் துறை சார்ந்த இறுதிக்கட்ட ஆய்வுகள் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகியவை அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டவுடன், இந்தியாவில் வணிக ரீதியான விற்பனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும். கட்டண விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
space x ன் கனவுத் திட்டம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் லட்சியத் திட்டமான ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 15-வது ஒருங்கிணைந்த சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு அரங்கேறியது. ஸ்டார்ஷிப் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு புவி வட்டப்பாதையை அடைந்து, சுமார்ட் 22 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் பல்வேறு சுற்றுக்களை நிறைவு செய்தது. விண்வெளிக்குச் சென்று சுற்றுப்பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டுத் திரும்பிய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மேல் பகுதி, மேகங்களை கிழித்துக்கொண்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது, அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஏவுதளத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத இயந்திரக் கைகள் மூலமாக இந்த விண்கலம் துல்லியமாகப் பிடித்து நிறுத்தப்பட்டது.
தரையிறங்கும் செயல்முறை
இந்த விண்கல மீட்புப் பணியின் தொழில்நுட்ப நுணுக்கங்கள் வியக்கத்தக்கவை. விண்ணில் ஏவப்பட்ட இந்த ஸ்டார்ஷிப் விண்கலம், தனது பயணத்தின் போது 26 ஸ்டார்லிங் வி3 (Starlink V3) செயற்கைக்கோள்களைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. புவியைச் சுற்றிய தனது நீண்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, அது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. வளிமண்டலத்திற்குள் திரும்பும் போது ஏற்படும் தாங்குதிறனைக் கடந்து, விண்கலம் தனது பக்கவாட்டுத் துடுப்புகளைப் பயன்படுத்திச் சமநிலையைப் பேணியது. அதன் பிறகு, செங்குத்தாகத் திரும்பிய விண்கலம் தனது ராப்டார் (Raptor) என்ஜின்களை இயக்கி வேகத்தைக் கட்டுப்படுத்தியது.
மெக்காசில்லா (Mechazilla) மற்றும் 'சாப்ஸ்டிக்ஸ்' (Chopsticks) தொழில்நுட்பம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட ஏவுதளக் கோபுரம் மெச்சாஜில்லா என்று அழைக்கப்படுகிறது. இதன் மீது அமைந்துள்ள ராட்சத இயந்திரக் கைகள் 'சாப்ஸ்டிக்ஸ்' (Chopsticks) என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன. வழக்கமாக ராக்கெட்டுகள் கடலிலோ அல்லது தரையிலோ உள்ள பிரத்யேக கால்கள் மீது தரை இறங்கும், ஆனால் இந்த ஏவுதளத்தில் உள்ள 'மெக்காசில்லா' என்று அழைக்கப்படும் ராட்சத கோபுரத்தின் இயந்திரக் கைகள், தரையிறங்கி கொண்டிருந்த விண்கலத்தை மிகத் துல்லியமாக இடைமறித்துக் காற்றிலேயே தாங்கிப் பிடித்தன. என்ஜின்கள் அணைக்கப்பட்டதும், அந்தச் சுட்டெரிக்கப்பட்ட விண்கலம் கோபுரத்தின் கைகளில் பத்திரமாகத் தொங்கவிடப்பட்டது. இந்தச் சாதனையானது விண்வெளி சார்ந்த திரைப்படங்களில் நடப்பதைப் போன்று நம்ப முடியாத ஒன்றாக இருந்ததாக விண்வெளி வல்லுநர்கள் வியந்துள்ளனர்.
எலான் மஸ்க் மற்றும் நாசா
இந்தச் சாதனையைத் தன் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டு தனது குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் இது "கிட்டத்தட்ட மந்திரம் போன்றது" என்று வர்ணித்ததுடன், மனிதகுலம் நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் பயணத்தை இது மேலும் துரிதப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
ஏன் இந்தச் சாதனை முக்கியமானது?
இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் அல்லது விண்கலப் பகுதிகள் மீண்டும் பயன்படுத்தப்படாமல் கடலிலோ அல்லது நிலப்பகுதியிலோ விழுந்து சேதமடைவது வழக்கம். அல்லது அவற்றை மீண்டும் இயக்க அதிக காலதாமதமும் செலவும் ஆகும். ஆனால், விண்கலத்தை எவ்வித சேதமுமின்றி அப்படியே கோபுரம் கொண்டு நடுக்காற்றில் பிடிப்பது, ராக்கெட் உதிரிப்பாகங்களை உடனடியாகவும் மிகக் குறைந்த செலவிலும் மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வழிவகுக்கும். இந்த வெற்றியானது எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் 'ஆர்டெமிஸ்' (Artemis) திட்டங்களுக்கும், செவ்வாய்க் கிரகத்திற்கான எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






