இன்றைய வாழ்க்கை முறையில் நீரிழிவு நோய் (Diabetes) பலருக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினையாக மாறி வருகிறது. குறிப்பாக, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. இதனை எப்படி தவிர்ப்பது என்ற விழிப்புணர்வுமின்மையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மருந்துகள் மட்டுமின்றி, அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் முறையான மருத்துவக் கண்காணிப்பு ஆகியவை சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. 1. நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உணவுப் பழக்கம் மிகவும் முக்கியமானது. வெள்ளை அரிசி, மைதா உணவுகள் மற்றும் இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக, ஓட்ஸ், முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, ரத்தத்தில் சர்க்கரை வேகமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த உதவும். 2. புரதச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் அவசியம் முட்டை, மீன், கோழி இறைச்சி, பயறு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவை வயிறு நிறைந்த உணர்வைத் தருவதுடன் சமச்சீரான உணவுப் பழக்கமாகும். 3. இனிப்பு உணவுகளைக் குறையுங்கள் குளிர்பானங்கள், பாக்கெட் பழச்சாறுகள், இனிப்புகள், கேக், பிஸ்கட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இவை ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கக்கூடும். 4. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகின்றன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா மற்றும் நீச்சல் போன்ற பயிற்சிகளை வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் செய்யுங்கள். 5. உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக நடப்பது, உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை அதிகரிப்பைக் குறைக்க உதவும். 6. போதுமான தண்ணீர் மற்றும் தூக்கம் அவசியம்! தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அதேபோல், இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். ஏனெனில், தூக்கமின்மை இன்சுலின் செயல்பாட்டைப் பாதிக்கலாம். 7. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள் தொடர்ச்சியான மன அழுத்தத்தால் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் அதிகரித்து ரத்த சர்க்கரை அளவும் உயர அதிக வாய்ப்புள்ளது. எனவே தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது உடல் மற்றும் மனநலத்திற்கு மிகவும் நல்லது.
Buy Now ! Pay Daily !
நம்மில் பலரும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு இனிப்புகள், தின்பண்டங்கள் மற்றும் இனிப்புச் சுவை கொண்ட பழங்கள்தான் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால், எல்லா இனிப்புச் சுவை கொண்ட உணவுகளும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. வெளியில் இருந்து சர்க்கரை சேர்க்கப்படும் இனிப்புகள், கேக், பிஸ்கட், குளிர்பானங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது உடல்நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், பழங்கள் மற்றும் பால் போன்ற இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்ட உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்வது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். எனவே, இனிப்புச் சுவையை மட்டும் வைத்து உணவுகளைத் தவிர்க்காமல், அதில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் ஊட்டச்சத்துக்களையும் கவனிப்பது அவசியம்.
ரத்த சர்க்கரையைத் தொடர்ந்து கண்காணியுங்கள் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி குளுக்கோமீட்டர் அல்லது தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்புக் கருவி மூலம் ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அல்லது இன்சுலினைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, தொடர் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
குறிப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. முறையான ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு மருத்துவரை அணுகவும்.


