← முகப்பு

எதிர்க்கட்சியே இல்லாத தீவு நாடு எது தெரியுமா?

பசிபிக் பெருங்கடல் தீவு நாடான நௌரூவின் (Nauru) நாடாளுமன்றத்தில் இதுவரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் தற்போது அரசாங்கத்துடன் இணைந்துவிட்டதாக அந்நாட்டின் அதிபர் டேவிட் அடீங் (David Adeang) அறிவித்துள்ளார். இந்த அசாதாரண அரசியல் நகர்வின் காரணமாக, 19 உறுப்பினர்களைக் கொண்ட நௌரூ நாடாளுமன்றம் தற்போது எவ்வித அரசியல் எதிர்ப்பும் இல்லாத முழுமையான ஆளுங்கட்சி அவையாக மாறியுள்ளது. அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள "ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பகிரப்பட்ட நோக்கம்" ஆகியவற்றையே இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியே இல்லாத தீவு நாடு எது தெரியுமா?

தென் பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள தீவு நாடுகளில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அணிகள் உருவாக்கப்படுவதும், உறுப்பினர்கள் அணி மாறுவதும் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அங்கே அரசியல் விவாதங்கள் எப்போதும் மிகவும் காரசாரமாகவும் வலிமையாகவும் நடைபெறுவது வழக்கம். ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது நௌரூவில் மிகவும் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

அதிபரின் முகநூல் பதிவு

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்ட அதிபர் அடீங், இந்த திடீர் மாற்றத்திற்கான எந்தக் காரணத்தையும் விளக்கவில்லை. பொதுவாக எதிர்க்கட்சிகளின் முக்கிய கடமையே அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டியும், அரசுக்கு எதிரான கேள்விகளை எழுப்பி மக்களின் குறைகளை நிர்வாகத்திற்கு தெரியபடுத்துவதேயாகும். ஓரவை முறை கொண்ட ஒரு நாட்டில் இனி யார் இப்பணியை மேற்கொள்வார்கள் என்பது குறித்தும் அவர் எவ்விதத் தகவலையும் தெரிவிக்கவில்லை. "எந்தவொரு வலிமையான மற்றும் ஆரோக்கியமான ஜனநாயகத்தையும் போலவே, இங்கும் பல்வேறு விதமான கருத்துகளுக்கும் ஆரோக்கியமான விவாதங்களுக்கும் எப்போதும் இடமிருக்கும்" என்று அதிபர் அடீங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு எதிர்க்கட்சி இல்லாத முதல் நாடாளுமன்றம்

பியோன் டெயீ (Pyon Deiye) மற்றும் ஜேசன் பிங்கம் அகிர் (Jason Bingham Agir) ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதன் மூலம், 1968-ஆம் ஆண்டு நௌரூ சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றம் முழுமையாக அரசாங்கத்தின் ஆதரவு நிலைக்கு மாறியுள்ளதாக அதிபர் அடீங் தெரிவித்துள்ளார். சுமார் 12,000 மக்கள் தொகையைக் கொண்ட நௌரூவில் உள்ள அனைத்து செய்தி நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்பதால், இந்த அரசியல் மாற்றம் குறித்து அறிவித்த அரசாங்கத்தின் முகநூல் பதிவுகள் மட்டுமே இது தொடர்பான ஒரே தகவல் ஆதாரமாக உள்ளன. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அந்நாட்டிற்குப் பயணம் செய்வதும் ஊக்குவிக்கப்படுவதில்லை; அங்கே செய்தியாளர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமே 8,000 ஆஸ்திரேலிய டாலர்களாக (இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ₹5,10,781) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், தங்கள் நாட்டின் பெயர் உள்ளூர் உச்சரிப்பிற்கு ஏற்ப 'நவோரோ' (Naoero) என அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும் என்று அடீங் அறிவித்தபோது சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இதன் மூலம் தங்கள் நாட்டின் பெயரை உள்ளூர் எழுத்துக்கோர்வைக்கு ஏற்ப முறையாக மாற்றியமைத்த நாடுகளின் பட்டியலில் நௌரூ இணைந்ததுடன், வெளியுலகினர் மிகக் குறைவாகப் பயணிக்கும் அந்நாட்டின் மீது சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது.

பசிபிக் தீவுகளில் வல்லரசுகளின் போட்டி மற்றும் புவிசார் அரசியல் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் குடியரசும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினருமான நௌரூ, மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு ஆகிய இரண்டிலுமே உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். பெரும்பாலான பசிபிக் தீவு நாடுகளில் வெளிநாட்டுச் சுற்றுலாவே முக்கியப் பொருளாதார ஆதாரமாக விளங்கும் நிலையில், நௌரூவில் உள்ள குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள், தொலைதூர அமைவிடம் மற்றும் பாஸ்பேட் சுரங்கத் தொழிலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றால் மிகக் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே அங்கு செல்கின்றனர்.

இருப்பினும், நௌரூ அமைந்துள்ள பரந்து விரிந்த பசிபிக் பெருங்கடல் பகுதி தற்போது உலக வல்லரசுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டிக்கான களமாக மாறியுள்ளதால், சமீபத்திய ஆண்டுகளில் நௌரூ போன்ற தென் பசிபிக் நாடுகளின் உள்நாட்டு அரசியல் மீது வெளிநாடுகளின் ஆர்வம் தீவிரமாக அதிகரித்துள்ளது.

உலகின் மிகவும் ஏழ்மையான சில பசிபிக் நாடுகளிடம் செல்வாக்கு செலுத்துவதில் சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.. நௌரூவும் இதற்கு விதிவிலக்கல்ல. தைவானுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணி வந்த மிகச் சில நாடுகளில் ஒன்றாக இருந்த நௌரூ, 2024-ஆம் ஆண்டில் தைவானுடனான உறவைத் துண்டித்துவிட்டு, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று உரிமை கொண்டாடும் சீனாவுடன் மீண்டும் ராஜதந்திர உறவுகளைத் தொடங்கியது. அன்றிலிருந்து அப்பிராந்தியத்தில் சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக நௌரூ மாறியுள்ளது.

புதிய அமைச்சர்களுடன் அதிபர் அடீங்கின் சீனப் பயணம்

அதிபர் அடீங் அதிகாரிகளைச் சந்திப்பதற்காகச் சீனா சென்றடைந்துள்ளதாகவும், அவருடன் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள டெயீ மற்றும் அகிர் உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளதாகவும் நௌரூ அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் முந்தைய அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடீங் நாட்டை வழிநடத்தி வருகிறார். 2025-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால், போட்டியின்றி மீண்டும் அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு நீதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, சர்வதேச செய்தி நிறுவனங்களுக்குக் கருத்து தெரிவித்ததற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்திலிருந்து அடீங் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. பசிபிக் தீவு நாடுகளில் பொதுவாகக் காணப்படுவது போலவே, நௌரூவிலும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் சுயேச்சைகளாகவே போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒரு காலத்தில் செல்வச்செழிப்புடன் இருந்த நெளரு

ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் வாஷிங்டனைச் சேர்ந்த, 'ஃப்ரீடம் ஹவுஸ்' (Freedom House) அமைப்பு தனது 2026-ஆம் ஆண்டு அறிக்கையில், நௌரூ மக்கள் "பொதுவாக அரசியல் உரிமைகளையும் சிவில் சுதந்திரங்களையும் அனுபவிக்கிறார்கள்" என்றும், அதே சமயம் ஊழல் என்பது "தொடர்ந்து நீடிக்கும் ஒரு சவாலாக" உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. பாஸ்பேட் ஏற்றுமதி உச்சத்தில் இருந்த காலத்தில் தனிநபர் வருமான அடிப்படையில் உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த நௌரூ, அத்தொழில் வீழ்ச்சியடைந்தபோது கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. அதன்பிறகு முதலீடு மூலம் குடியுரிமை வழங்கும் திட்டத்தை (golden passport scheme) பரிசோதித்துப் பார்த்த நௌரூ, ஒரு காலகட்டத்தில் வரி ஏய்ப்புச் சொர்க்கமாகவும் (tax haven) செயல்பட்டது. தற்போது அந்நாடு வெளிநாட்டு நிதியுதவிகள், தனது கடல் பகுதியில் சூரை மீன் பிடிப்பதற்கான (tuna fisheries) உரிமங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் தஞ்சம் கோருபவர்களுக்கான கடல் கடந்த தடுப்பு முகாம்களை நடத்துவதற்காகவும், பின்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்கு இடமளிப்பதற்காகவும், ஆஸ்திரேலியா வழங்கும் நிதி ஆகியவற்றை நம்பியே தனது பொருளாதாரத்தை நடத்தி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

எதிர்க்கட்சியே இல்லாத தீவு நாடு எது தெரியுமா? | INDIAVAANI