மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12-ம் தேதியன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தத் துணிகரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பதைக் கண்டறியக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர்.
காவல்துறையின் வியூகமும் 9 தனிப்படைகளும்
Buy Now ! Pay Daily !
குற்றவாளியைக் கண்டுபிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அவர்களின் நேரடி உத்தரவின் பெயரில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மிகத் தீவிரமான புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்தில் யூடியூபர் நிஷாந்த் என்பவருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருடன் இவரது காதலியும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸருமான மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது அம்பலமானது.
சிக்கியது எப்படி? - முக்கியத் திருப்புமுனைகள்
பிரதான குற்றவாளியான நிஷாந்திற்கு ஏற்பட்டிருந்த கடுமையான கடன் தொல்லையே இந்தத் தனிஷ்க் நகைக்கடை கொள்ளைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று காவல் ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். நிஷாந்த் கை பகுதியில் வரைந்திருந்த டாட்டூ மற்றும் அவரது உடல் அசைவுகள் தொடர்பான தடயங்கள் அவரை அடையாளம் காண போலீசாருக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. நிஷாந்தின் செல்போன் கால் டேட்டா மற்றும் உரையாடல்களைக் கொண்டு ஆராய்ந்தபோது, 'யூடியூபர் மீனாட்சி' மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோரின் தொடர்பு வெளிவந்தது. இவர்களைத் தனிப்படையினர் உடனடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனாட்சி அளித்த தகவலின் அடிப்படையில்தான், மதுரை மாடக்குளம் கபாலீஸ்வரி அம்மன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள வயல் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5.75 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. மீனாட்சி கைது செய்யப்பட்டபோது அவரிடம் நேரடியாக நகைகள் எதுவும் இருக்கவில்லை, அவர் காட்டிய இடத்தில்தான் நகைகள் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த நிஷாந்தைத் தேட காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டிருந்தனர். இதற்கிடையே, பெங்களூரு - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்தில் தப்பிக்க முயன்ற நிஷாந்தை, பஸ் டிரைவர் ரீல்ஸ் பார்த்து அடையாளம் கண்டுகொண்டதையடுத்து, அதியமான்கோட்டை போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
காவல் ஆணையாளர் ராஜேந்திரன் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்
காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்த முக்கியத் தகவல்கள்: நிஷாந்திற்குத் தனிஷ்க் நகைக்கடையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் மூலமாக எதேனும் உதவி கிடைக்கப்பெற்றதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கடையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சில குறைகள் இருந்துள்ளன. குறிப்பாக, கடையின் பின்புறம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆணையர், நகைக் கடைகள் தங்களது வளாகத்தைச் சுற்றிலும் முழுமையான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது அவசியமானது என்று வலியுறுத்தினார். கைதானவர்களை முறையான போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் இந்த வழக்கில் உள்ள அத்தனை ரகசியங்களும் முழுமையாக வெளிவரும் என்று அவர் தெரிவித்தார்.






