நவம்பர் 11ம் தேதி, குல்கம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. இந்நிலையில் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து அப்பகுதியை முழுமையாகச் சுற்றிவளைத்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லத்தீப் பட் என்கிற பயங்கரவாதி உயிரிழந்தார்.

Buy Now ! Pay Daily !
குல்காம் பகுதியைச் சேர்ந்த லத்தீப் பட், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணைந்து தெற்கு காஷ்மீரின் பல்வேறு மறைவிடங்களில் தங்கியிருந்து செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு உள்ளூர் ஆதரவாளர்களின் வலுவான வலையமைப்பு உதவி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 2026-ஆம் ஆண்டில் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் லத்தீப் பட்டுக்குத் தொடர்புள்ளது. குறிப்பாக, ஜூலை 22-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தின் லால் சௌக் பகுதியில் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஜூலை 31-ஆம் தேதி குல்காமில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதல்களிலும் இவன் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தான்.
உச்சகட்ட பாதுகாப்பும் அரசியல் விமர்சனங்களும்
கடந்த வாரத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் சி.ஆர்.பி.எஃப் படைகள் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அப்படையின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் (SDG) சந்தீப் கிர்வார் திங்களன்று தெரிவித்தார். மறுபுறம், அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தத் தாக்குதல்கள் யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்புச் சூழல் குறித்த அரசியல் விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், அது தனது இறுதி மூச்சை எண்ணிக்கொண்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு எதிராகப் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்துப் பேசிய ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பரூக் அப்துல்லா, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாகக் கூறுபவர்களின் வாதம் தவறானது என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.






