← முகப்பு

மிடில் கிளாஸுக்கு விமானப் பயணம் இனி கனவே? - டிக்கெட் விலை எகிறிடுச்சு!

பண்டிகைக் காலம் மற்றும் வரவிருக்கும் திருமண சீசனை முன்னிட்டு உள்நாட்டு விமானக் கட்டணங்கள் சுமார் 50 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. விமான நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மிடில் கிளாஸுக்கு விமானப் பயணம் இனி கனவே? - டிக்கெட் விலை எகிறிடுச்சு!

இது தொடர்பாக வர்த்தக மற்றும் தொழில்துறை சபையான 'சி.டி.ஐ' (Chamber of Trade and Industry - CTI), மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபுவுக்குக் கடிதம் எழுதியுள்ளது. கடந்த 15 நாட்களில் விமான டிக்கெட்டுகளின் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளதால், சத் பூஜை பண்டிகை மற்றும் திருமண நிகழ்வுகளுக்காகப் பயணம் செய்யும் சாமானிய மக்களுக்கு விமானப் பயணம் என்பது எட்டாக்கனியாக மாறி வருவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்பட்டுள்ள சுமை

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த விவகாரம் குறித்துப் பேசிய சி.டி.ஐ தலைவர் பிரிஜேஷ் கோயல், விமானக் கட்டணங்களின் இந்த அதிரடி விலை உயர்வு வர்த்தகர்களை மட்டுமல்லாமல், பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த நடுத்தர குடும்பத்தினரையும், சாதாரணப் பயணிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகத் தெரிவித்தார். தற்போது சத் பூஜை பண்டிகை நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 20-ஆம் தேதி முதல் திருமண சீசனும் தொடங்கவுள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் கொண்டாட்டங்களுக்காகவும் திருமணங்களில் பங்கேற்பதற்காகவும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க விரும்புகின்றனர். ஆனால், டிக்கெட் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், பலர் தங்கள் பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய வழித்தடங்களில் இருமடங்கான கட்டணங்கள்

சி.டி.ஐ அமைப்பு நடத்திய ஆய்வின்படி, சில நாட்களுக்கு முன்பு இருந்த கட்டணங்களுடன் ஒப்பிடும்போது, டெல்லியில் இருந்து செல்லும் பல முக்கிய வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளன. தற்போது நிலவும் கட்டண விவரங்கள் பின்வருமாறு:

வழித்தடம் – தற்போதைய விமானக் கட்டணம் (ரூபாயில்)

டெல்லி – தர்பங்கா (₹20,000) டெல்லி – பாட்னா (₹18,000) டெல்லி – பெங்களூரு (₹16,000 – ₹18,000) டெல்லி – மும்பை (₹15,000) டெல்லி – ஹைதராபாத் (₹11,000 – ₹15,000) டெல்லி – அகமதாபாத் (₹11,000) இந்த வழித்தடங்களில் சில நாட்களுக்கு முன்பு வரை மிகக் குறைவான கட்டணமே வசூலிக்கப்பட்டதாகவும், இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக குடும்பத்துடன் பயணிப்பவர்களுக்குப் பெரும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரிஜேஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்து முக்கிய கோரிக்கைகள்

விமானக் கட்டண உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் சி.டி.ஐ அமைப்பு ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது: - பண்டிகைகள் மற்றும் திருமண சீசன் காலங்களில் விமான நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணங்களை வசூலிப்பதைத் தடுக்கவும், கட்டணங்களை ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். - எந்தவொரு விமான நிறுவனமும் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பைத் தாண்டி பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில், ஒவ்வொரு வழித்தடத்திற்கும் அதிகபட்ச கட்டண வரம்பை (Upper fare cap) அரசு நிர்ணயிக்க வேண்டும். - பயணிக்கப்படும் தூரம் மற்றும் கிலோமீட்டர்களின் அடிப்படையில் வெளிப்படையான கட்டண நிர்ணய முறை உருவாக்கப்பட வேண்டும். 500 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் விமானத்திற்கும், 1,500 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் விமானத்திற்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க முடியாது என்பதால், பயணத் தூரத்திற்கு ஏற்பவே டிக்கெட் விலைகள் அமைய வேண்டும். - பயணிகளின் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில், குறிப்பாக டெல்லி-பாட்னா, டெல்லி-தர்பங்கா, டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - விமானப் போக்குவரத்துத் துறையில் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கவும், பயணிகளுக்கு மலிவு விலையில் பயண வாய்ப்புகளை வழங்கவும் நாட்டில் புதிதாக இரண்டு அல்லது மூன்று விமான நிறுவனங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !