தமிழ் சினிமாவில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்பவராகும், பல துறை வித்தகராகவும் விளங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். தனது படங்கள் ஒவ்வொன்றிலும் புதிய புதிய பாணியை முயன்று பார்க்கும் கமல்ஹாசன் 2000களில் நடித்த ஹே ராம், அன்பே சிவம், ஆளவந்தான் என பல படங்கள் இன்றும் சினிமா ரசிகர்களின் வரவேற்பு பெரும் படங்களாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது. படத்தின் பெயர் சண்டியர் என போஸ்டர் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 2004ம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்து இயக்கி வெளியான படம் ’விருமாண்டி’. ஆனால் அந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் ’சண்டியர்’.
Reach our readers. Contact us to advertise in this space.
ஆனால் இந்த சண்டியர் என்ற பெயர் தென் தமிழகத்தில் குறிப்பாக ஒரு சாதியை உயர்த்தி பிடிக்கும் வகையில் அமைந்தது என்றும், சாதி ரீதியான கொந்தளிப்பை இது ஏற்படுத்தலாம் என்றும் அப்போதே புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அன்றைய முதல்வரான ஜெயலலிதாவும் ’சண்டியர்’ என்ற படத் தலைப்பு தடை விதித்தார். அதனால் சண்டியர் விருமாண்டியானது. ஆனாலும் படம் முழுவதும் ’சண்டியர்’ என்ற வார்த்தையை அதிகமாக வசனங்களில் பயன்படுத்தியிருந்தார் கமல்ஹாசன்.
ஆனால் அதற்கு பின்னர் சண்டியர் என்ற பெயரை பயன்படுத்தி சில தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனது நிறைவேறாத ஆசையாக மீண்டும் ’சண்டியர்’ தலைப்பை எடுத்த கமல்ஹாசனுக்கு, மீண்டும் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் இருந்து கண்டனம் பறந்துள்ளது. முன்னர் எதிர்ப்பு எழுந்ததால் இந்த தலைப்பை கைவிட்ட கமல், மீண்டும் அதை கையில் எடுப்பது அவரது அகம்பாவத்தை காட்டுகிறது என்றும், மேலும் இதே பெயருடன் கமல் இந்த படத்தை வெளிடுவாரானால் அவர் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாட முடியாத, தமிழகத்தை விட்டு வெளியேறக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் கண்டித்து பேசியுள்ளார்.




