ஈரானின் அணுசக்தி ஆய்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அமெரிக்க கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஈரானுடன் போர் செய்து வருகிறது. இதனால் ஈரான் சர்வதேச கப்பல் போக்குவரத்து கேந்திரமான ஹார்முஸ் நீர்முனையை மூடியதால் சர்வதேச பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடப்பதும், அதன் பின்னர் போர் தாக்குதல்கள் நடப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ட்ரம்ப் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருவதே எனக் கூறப்பட்ட நிலையில், அதை தானும் ஒத்துக் கொள்வதாக கூறிய ட்ரம்ப், ஆனாலும் போரை கைவிட மாட்டேன் என பிடிவாதமாக பேசி வருகிறார்.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் ட்ரம்புக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் காசெம் கரிபாபாடி ”ஈரான் ஒன்றும் அமெரிக்கா எளிதாக முற்றுகையிடக் கூடிய க்யூபாவோ அல்லது தாக்கியதும் சரணடைந்து விடுகிற வெனிசுலாவோ கிடையாது. அமெரிக்கா வான்வழி, தரைவழி என எந்த வழியாக வந்து தாக்கியும் இதுவரை குறிப்பிடத்தக்க எந்த வெற்றியையும் அடைய முடியவில்லை.
ஈரானின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு போர் நிரந்தரமாக முடிவுக்கு வரும் வரை ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமையை அனுமதிக்க முடியாது. ராஜதந்திர பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கு நடுவே அமெரிக்கா தனது தீய நோக்கங்களையும் வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறையாவது பேச்சுவார்த்தையை மீறி அமெரிக்கா தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் நிலைபாடு நம்பகத்தன்மையற்றது” என அவர் விமர்சித்துள்ளார்.
வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துகளை விடுவிக்க வேண்டும், போரை முழுவதுமாக நிறுத்த வேண்டும், அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுவதுமாக நீக்க வேண்டும் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான இலக்காக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






